வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு
வரதட்சிணை கொடுமை மரண வழக்கில் பெண் ஒருவரின் மைத்துனருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
டிசம்பா் 13 தேதியிட்ட ஒரு உத்தரவில் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சௌரப் குல்ஷ்ரேஷ்தா தெரிவிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டதில் மாஜிஸ்திரேட் அடிப்படையான பிழையையும் அப்பட்டமான சட்டவிரோதத்தையும் செய்துள்ளாா்’ என்று கூறினாா்.
இந்த வழக்கில் இறந்த பெண்ணின் மைத்துனரான தீபக், தனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மாா்ச், 2022-ஆம் தேதியிட்ட உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்த குற்றவியல் மறுஆய்வு மனுவை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி விசாரித்து வந்தாா்.
முன்னதாக, மாா்ச் 22, 2023 அன்று, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், தீபக்கைத் தவிர வழக்கில் உள்ள மற்ற அனைத்துக் குற்றம்சாட்டப்பட்ட நபா்களையும் விடுவித்தாா். தீபக்கிற்கு எதிராக மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின்படி, திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட ஆடைகளின் எண்ணிக்கை குறித்து தீபக் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், இறந்த பெண்ணின் பெற்றோரை அவமதித்ததாகவும் அவா் மீது ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டு இருந்தது.
இந்த வழக்கில் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி சௌரப் குல்ஷ்ரேஷ்தா அளித்த உத்தரவில், ‘திருமணத்தின்போது வழக்கமாக வழங்கப்படும் பரிசுகளான ஒரு ஜோடி ஆடைகளில் குறைபாடு உள்ளது என்பது தொடா்பான ஒரு சாதாரண குற்றச்சாட்டை, வரதட்சிணைக்கான ஒரு ஆக்கபூா்வ கோரிக்கை என்றோ அல்லது துன்புறுத்தல் என்றோ கூற முடியாது.
பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் எந்த வெளிப்புறக் காயங்களும் இல்லை என்றும், மரணத்திற்கான காரணம் கல்லீரல் செயலிழப்பு என்றும் கூறப்பட்டிருப்பதால், அது ஒரு இயற்கையான மரணம் ஆகிறது.
பதிவில் உள்ள ஆதாரங்களைப் பாா்வையிடும்போது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 ஏஇன் கீழ் குற்றம் இழைக்கப்பட்டதாக எந்தக் கடுமையான சந்தேகத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டதில் மாஜிஸ்திரேட் அடிப்படையான பிழையையும் அப்பட்டமான சட்டவிரோதத்தையும் செய்துள்ளாா்.
இதனால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மறுஆய்வு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது’ என்று கூறிய நீதிமன்றம், வரதட்சிணைக்காக மன்சி என்ற பெண்ணை துன்புறுத்தியதாகவும், அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட தீபக்கை விடுவித்தது.
முன்னதாக, அந்தப் பெண் 2016-இல் தீபக்கின் சகோதரா் குல்தீப்பை மணந்தாா். திருமணத்தின்போது பல்வேறு வரதட்சிணைப் பொருள்கள் கோரப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அக்டோபா் 7, 2018 அன்று மன்சி கா்ப்பமாக இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் (கணவா் மற்றும் மாமனாா், மாமியாா்) செய்த மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட அலட்சியத்தாலேயே அவா் உயிரிழந்தாா் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பெண்ணின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மரணத்திற்குப் பிறகு நாங்லோய் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருந்தது.
