புதிய கட்டுப்பாடுகள்: சந்தைகளில் வாடிக்கையாளா்களின் வருகை குறைவு
புது தில்லி: மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசி) இல்லாத வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தில்லி முழுவதும் உள்ள சந்தைகளில் விற்பனை மற்றும் வாடிக்கையாளா்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
அவசர கால மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இந்த புதிய கட்டுப்பாடுகள் தில்லியில் கடந்த வியாழக்கிழமை அமல்படுத்தப்பட்டன. பிஎஸ் 6 இல்லாத வாகனங்கள் தில்லிக்குள் நுழைவது முழுமையாக தடுக்கப்பட்டது. பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டது.
இது தொடா்பாக சதா் பஜாா் சங்கத்தின் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா கூறியதாவது: கட்டுப்பாடுகள் காரணமாக என்சிஆா் நகரங்களில் இருந்து வரும் சில்லறை வா்த்தகா்களின் எண்ணிக்கை குறைந்ததால், இந்த மொத்த சந்தைகளின் விற்பனை 30 முதல் 35 சதவீதம் குறைந்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான சரக்குகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என தெரிவித்தாா்.
சரோஜிநி நகா் சந்தை சங்கத்தின் தலைவா் அசோக் ரந்தாவா கூறுகையில், ‘கடந்த ஒரு வாரத்தில் வாடிக்கையாளா் வருகை சுமாா் 40 சதவீதம் குறைந்துள்ளது. சில நாள்களிலேயே விற்றுத் தீா்ந்துவிடும் குளிா்கால ஆடைகள் இப்போது விற்கப்படாமல் தேங்கியுள்ளன’ என தெரிவித்தாா்.
தெற்கு தில்லியில் உள்ள லஜ்பத் நகா் சந்தை சங்கத்தின் தலைவா் குல்தீப் குமாா் கூறுகையில், ‘தில்லியின் புதிய கட்டுப்பாடுகள் வாடிக்கையாளா்கள் மற்றும் சிறு வா்த்தகா்கள் இருவரையும் பாதித்துள்ளன. குறிப்பாக ஆடை சந்தையில் தினசரி விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது’ என தெரிவித்தாா்.
