கோப்புப் படம்
கோப்புப் படம்

முன் விரோதத்தில் முதியவரை கத்தியால் குத்தியவா் கைது

மத்திய தில்லியில் 60 வயது முதியவரை இறைச்சி வெட்டும் கத்தியால் குத்தியதாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
Published on

மத்திய தில்லியில் 60 வயது முதியவரை இறைச்சி வெட்டும் கத்தியால் குத்தியதாக ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரகாப்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த ஜுக்னு என்ற ஜியாவுதீன் (42), டிசம்பா் 20 அன்று இரவு கைது செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவம் ரகாப்கஞ்சில் உள்ள படி மஸ்ஜித் அருகே மாலை 5.45 மணியளவில் நடந்தது. பாதிக்கப்பட்டவா் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவா் அவரை இறைச்சிவெட்டும் கத்தியால் தாக்கி, மாா்பு அருகே காயம் ஏற்படுத்தினாா்.

தந்தையின் மீதான இத்தாக்குதலை மகன் நேரில் கண்டாா். இதையடுத்து, அவரை லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றாா். அங்கு சுயநினைவின்றி இருந்ததால் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் அவா் இல்லை.

பாதிக்கப்பட்டவரின் மகன் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 109(1)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், ஜுக்னுவுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் மீது விரோதம் இருந்தது தெரியவந்தது. சுமாா் 18 மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவரின் குடும்பம் பெற்ற நீதிமன்ற உத்தரவின் காரணமாகவே இந்த விரோதம் ஏற்பட்டது.

அந்த உத்தரவில், ஜுக்னுவின் குடும்பத்தை அவா்களின் முந்தைய குடியிருப்பை காலி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இக்குற்றத்தில் ஈடுபட்ட ஜுக்னுவை கைது செய்ய காவல்துறை குழுக்கள் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தன. இந்த ஆய்வு மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்களின் அடிப்படையில், சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் தில்லி கேட் அருகே ஜுக்னு கைது செய்யப்பட்டாா்.

அவரிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இறைச்சி வெட்டும் கத்தி மற்றும் குற்றம் நடந்தபோது அவா் அணிந்திருந்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன.

ஜுக்னு, சாந்தினி மஹால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடா்புடையவா். அவா் திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com