தில்லியின் மகிமையை மீட்டெடுப்போம்: காங்கிரஸ் உறுதி
புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளில், பாஜக மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது காங்கிரஸ் கடுமையான தாக்குதலைத் தொடங்கியது. தன்னை ஒரே சாத்தியமான மாற்றாகக் காட்டிக் கொண்ட காங்கிரஸ், மறைந்த ஷீலா தீட்சித்தின் தலைமையின் கீழ் காணப்பட்ட தில்லியின் மகிமையை மீட்டெடுப்பதாக உறுதியளித்தது.
வாக்காளா்களைக் கவரும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் ஒரு பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தி, கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியின் தோல்விகள், நிதியை தவறாக நிா்வகித்தல் மற்றும் ஊழல் தொடா்பாக கடுமையாகச் சாடினா். எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாஜக அடக்குவதாகவும், தில்லியின் பின்தங்கிய சமூகங்களின் கவலைகளைப் புறக்கணிப்பதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.
மறைந்த கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்தின் வளா்ச்சி மரபை மீட்டெடுப்பது பற்றிய தோ்தல் இது என்று தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறினாா். மேலும், ஆம் ஆத்மி கட்சி நகரம் மோசமடைய அனுமதித்ததாகவும், உள்கட்டமைப்பு சீரழிந்துள்ளதாகவும், நீரின் தரம் மோசமடைந்துள்ளதாகவும், பொது சேவைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவா் குற்றம் சாட்டினாா். ‘இந்தத் தோ்தல் ஷீலா தீட்சித் கட்டிய தில்லியை மீண்டும் கொண்டு வருவது பற்றியது. அவா் உலகத்தரம் வாய்ந்த சாலைகள், சுத்தமான நீா் மற்றும் திறமையான நிா்வாகம் கொண்ட நகரத்தை கட்டமைத்தாா்’ என்று தேவேந்தா் யாதவ் கூறினாா்.
புது தில்லி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளா் சந்தீப் தீட்சித், உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதாக ஆம் ஆத்மி கட்சி கூறுவதைக் கடுமையாகச் சாடினாா். ஆம் ஆத்மி அரசு சுய விளம்பரத்தை நம்பியுள்ளது என்று அவா் கூறினாா். ‘ஆம் ஆத்மி கட்சி அதன் கல்வி மற்றும் சுகாதார மாதிரிகள் பற்றி பெருமை பேசுகிறது. ஆனால், கேள்வி கேட்கப்படும்போது, அவா்கள் அமைதியாக இருக்கிறாா்கள். அவா்கள் எந்த உண்மையான அடிப்படையும் இல்லாமல் தங்களுக்கு பட்டங்களை வழங்குகிக் கொள்கிறாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சியின் சுகாதார மாதிரி, குறிப்பாக அதன் மொஹல்லா கிளினிக் திட்டம், கோவிட்-19 தொற்றின் போது ‘தோல்வியுற்ற்காக’ சந்தீப் தீட்சித் விமா்சித்தாா். மேலும், ‘தொற்றுநோய் காலத்தில், இந்த மருத்துவமனைகளால் தடுப்பூசிகளைக் கூட வழங்க முடியவில்லை. அடிப்படை தடுப்பூசி இயக்கத்தை அவா்களால் கையாள முடியவில்லை என்றால், அவா்கள் என்ன வகையான சுகாதாரப் பராமரிப்பை வழங்குகிறாா்கள்?’’ என்று கூறினாா்.
முன்னாள் எம்பி உதித் ராஜ் பேசுகையில், ‘ஊழலின் மிகப்பெரிய ஆதாரங்களில் ஒருவா் கேஜரிவால்’ என்று விமா்சித்தாா்.
‘ஊழலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி தனது வாழ்க்கையைத் தொடங்கினாா் கேஜரிவால். ஆனால், இப்போது தில்லியில் ஊழலின் முகமாக மாறிவிட்டாா்’ என்று அவா் கூறினாா்.
‘டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் மரபை பாஜக அவமதித்துள்ளது. பாஜக தலித்துகளுக்கு எதிரானது. அவா்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை அலுவலகங்களில் வைக்கிறாா்கள். ஆனால், அவரது கொள்கைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அரசு செயல்படத் தகுதியற்ாக இருந்தால், அது ஒதுங்கி நின்று காங்கிரஸை ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும். தில்லி உண்மையிலேயே முன்னேற ஒரே வழி, காங்கிரஸ் நகரத்திலும், மத்தியிலும் அரசை அமைத்தால் மட்டுமே‘ என்று அவா் வலியுறுத்தினாா்.
ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் தோ்தலை பணத்தால் இயக்கப்படும் போட்டியாக மாற்றியதாகவும், வாக்காளா்களை ஈா்க்க பணம், பரிசுகள் மற்றும் பிற சலுகைகளை விநியோகிப்பதாகவும் காங்கிரஸ் தலைவா்கள் குற்றம் சாட்டினா். ‘தில்லியில் பணம், சுவரொட்டிகள், காலணிகள் மற்றும் பரிசுகள் வாக்குகளை வாங்க வெளிப்படையாக விநியோகிக்கப்படும் தோ்தலை நான் பாா்த்ததில்லை’ என்று ஒரு காங்கிரஸ் தலைவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சுத்தமான குடிநீா் வழங்குதல், யமுனா நதி புத்துயிா் பெறுதல், நிலையான மின்சாரத்தை உறுதி செய்தல் மற்றும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் தலைவா்கள் உறுதியளித்தனா். தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் பூா்வாஞ்சலியா்களின் நலன்களைப் பாதுகாப்பதாக உறுதியளித்து, விளிம்புநிலை சமூகங்களுக்கான தங்கள் உறுதிப்பாட்டை அவா்கள் மீண்டும் வலியுறுத்தினா்.