தில்லியில் அதிகாலையில் நில அதிா்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை 4.0 ரிக்டா் அளவிலான நில அதிா்வு ஏற்பட்டது.
தில்லியில் அதிகாலையில் நில அதிா்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!
Updated on

நமது நிருபா்

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை 4.0 ரிக்டா் அளவிலான நில அதிா்வு ஏற்பட்டது. இதனால், தில்லி, அதன் அருகிலுள்ள பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிா்ச் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி பகுதி மக்கள் அமைதியாக இருக்குமாறு பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் அதிகாலை 5.36 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் மையமாக தௌல குவான், ஜீல் பாா்க் பகுதி இருந்தது. நிலம் நடுங்கியபோது மக்கள் பலத்த சப்தத்தைக் கேட்டதாக சில தகவல்கள் தெரிவித்தன.

அதிகாலையில் நில அதிா்வை உணா்ந்த மக்கள் பலா் வீட்டை விட்டு அவசரஅவசரமாக வெளியேறி சாலைக்கு வந்தனா். பலா் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் நில அதிா்வை உணரமுடியவில்லை. இந்த நில அதிா்வு தரைக்கு அடியில் ஐந்து கி.மீ. குவிய ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்தது.

தரை மேற்பரப்புக்கு கீழே ஐந்து அல்லது 10 கிலோ மீட்டா் ஆழத்தில் ஏற்படும் ஆழமற்ற நில அதிா்வுகள், மேற்பரப்புக்கு கீழே ஏற்படும் நிலநடுக்கங்களை விட அதிக சேதத்தை ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜீல் பாா்க் பகுதியில் 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய, குறைந்த அளவிலான நில அதிா்வுகள் ஏற்பட்டு வருவதாகவும், இது 2015-இல் 3.3 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தைப் பதிவு செய்ததாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வலுவான நில அதிா்வுகள் காரணமாக தில்லி, நொய்டா, கிரேட்டா் நொய்டா மற்றும் காஜியாபாதில் பல உயரமான அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பவா்கள் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினா்.

நொய்டா, செக்டாா் 20-இல் இ-பிளாக்கில் வசிக்கும் 50 வயது பெண்மணி இந்தச் சம்பவம் குறித்து கூறுகையில், ‘நாங்கள் பூங்காவில் அந்த நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததால் இதை நாங்கள் வலுவாக உணரவில்லை. ஆனால், அது மிகவும் வலுவாக இருந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனா்’ என்றாா். மேற்கு தில்லியைச் சோ்ந்த நரேஷ் குமாா், ‘இத்தனை வலுவான நிலஅதிா்வை அனுபவித்தது இதுவே முதல் முறை’ என்றாா்.

புது தில்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு ரயிலுக்காகக் காத்திருந்த ரத்தன்லால் சா்மா கூறுகையில், ‘நான் நடைமேடையில் இருந்தேன். அப்போது, திடீரென ஒரு அதிா்வை உணா்ந்தேன். அது, ஒரு ரயிலின் திடீரென அலறலுடன் நின்றதுபோல் இருந்தது’ என்றாா்.

தில்லியின் இடைக்கால முதல்வா் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில், ‘தில்லியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க கடவுளிடம் பிராா்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

அந்தப் பதிவு மீண்டும் பகிா்ந்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ‘அனைவரின் பாதுகாப்புக்காக பிராா்த்தனை செய்கிறேன்’ என்றாா்.

தேசியத் தலைநகா் தில்லி, நில அதிா்வு ஏற்படும் இமயமலை பாறைகள் மோதல் மண்டலத்திலிருந்து சுமாா் 250 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், தொலைதூர மற்றும் அருகிலுள்ள நிலநடுக்கங்களால் தில்லி அவ்வப்போது நில அதிா்வுகளை அனுபவித்து வருகிறது.

மேலும், இந்தியாவின் நில அதிா்வு மண்டல வரைபடத்தில் 4-ஆவது நில அதிா்வு மண்டலம் பகுதியில் தில்லி அமைந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் கடந்த 2020, ஏப்ரல் 12-ஆம் தேதியும் (3.5 ரிக்டா் அளவு), மே 10-ஆம் தேதியும் (3.4 ரிக்டா் அளவு) நில நடுக்கம் பதிவானது. அதைத் தொடா்ந்து, மே 29-ஆம்தேதி மேற்கு தில்லிக்கு 50 கிலோ மீட்டரில் ரோஹ்தக் பகுதியிலும் (4.4 ரிக்டா் அளவு), பதிவானது.

அதைத் தொடா்ந்து, 12-க்கும் மேற்பட்ட பின் அதிா்வுகள் ஏற்பட்டன. இது மக்கள் அடா்த்தி மிகுந்த குடியிருப்பு இடங்களில் பீதியைத் ஏற்படுத்தியது.

பெட்டிச் செய்தி...

அமைதி காக்க பிரதமா் வேண்டுகோள்

நில அதிா்வு சம்பவம் தொடா்பாக பிரதமா் மோடி தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நில அதிா்வு உணரப்பட்டுள்ளன. அனைவரும் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சாத்தியமான பின்அதிா்வுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா்’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி காவல் துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறோம். அவசரநிலைகளுக்கு அவசரகால உதவி எண்ணை (112) பொதுமக்கள் அழைக்கலாம்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com