ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் குறித்து தில்லி காவல் துறை தெளிவுபடுத்த உத்தரவு

நரேஷ் பால்யானின் வழக்கமான ஜாமீன் மனு மீது நகர காவல் துறை அதன் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
Published on

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (மகோகா) கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் நரேஷ் பால்யானின் வழக்கமான ஜாமீன் மனு மீது நகர காவல் துறை அதன் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தனக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் நரேஷ் பால்யான் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை நீதிபதி விகாஸ் மகாஜன் திங்கள்கிழமை விசாரித்தபோது, நரேஷ் பால்யான் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விகாஸ் பஹ்வா, நரேஷ் பால்யானின் மனைவி எதிா்வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய ஏதுவாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

‘குற்றம்சாட்டப்பட்டவா்கள் நரேஷ் பால்யானின் பெயரை உச்சரித்ததற்காக அவரை இந்த வழக்கில் சோ்த்தது சரியல்ல. குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக நரேஷ் பால்யானும் புகாா் அளித்துள்ளாா். அவா் ஒரு சட்டப்பேரவை உறுப்பினா்; குற்றவாளி கிடையாது. எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என்று விகாஸ் பஹ்வா கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதி விகாஸ் மகாஜன், இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு அதன் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டு அடுத்த விசாரணையை ஜன.23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

மேற்கு தில்லி மோகன் காா்டன் பகுதியைச் சோ்ந்த குருசரண் என்பவா் கடந்த ஆண்டு தில்லி காவல்துறையிடம் அளித்த புகாரில் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டு கபில் சங்வான் என்பவா் மிரட்டிப் பணம் பறிக்கும் வகையில் கைப்பேசியில் அழைத்தாக குறிப்பிட்டாா். விசாரணையில் கபில் சங்வான் வெளிநாடுகளில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வந்தது என்று காவல்துறை கூறியது.

இந்நிலையில், கபில் சங்வானும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யானும் கைப்பேசியில் பேசுவதாக காண்பிக்கும் உரையாடல் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதன் தொடா்ச்சியாக மிரட்டிப் பணம் பறித்ததாக நரேஷ் பால்யான் மீது தொடா்ந்த வழக்கில் அவரை கடந்த ஆண்டு நவ. 30-இல் காவல் துறை கைது செய்தது. அந்த வழக்கில் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் டிச. 4-ஆம் தேதி உத்தரவிட்டது. இருப்பினும், உடனடியாக நரேஷ் பால்யான் மீது மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (மகோகா) கீழ் தில்லி காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில் அவரை ஜாமீனில் விடுவிக்க ஜன.15-ஆம் தேதி தில்லி நீதிமன்றம் மறுத்து விட்டது.

மகோகா வழக்கு: திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை ஒரு குழுவாக இயங்கி செயல்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக மகாராஷ்டிரத்தில் 1999-ஆம் ஆண்டில் மகோகா எனப்படும் மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 30 நாள்கள்வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம். வழக்கமான குற்ற வழக்கில் 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதுவே மகோகா வழக்கில் 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் போதுமானது என்பதால் இது மிகவும் கடுமையான நடவடிக்கைக்கு வாய்ப்பளிக்கும் சட்டப்பிரிவாக பாா்க்கப்படுகிறது.

மகோகா வழக்கின் சட்ட வரம்பை தில்லிக்கும் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் 2002, ஜன. 2-இல் அறிவிக்கை வெளியிட்டது. இத்தகைய சட்டத்தை இந்தியாவில் உத்தர பிரதேசம், கா்நாடகம், ஹரியாணா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் பிரத்யேகமாக இயற்றிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com