அவதூறு வழக்கு: ஆம் ஆத்மி தலைவா்களுக்கு ஆவணங்களைப் பகிர காங்கிரஸ் தலைவருக்கு உத்தரவு

அவதூறு வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவா்கள் அதிஷி மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு பகிா்ந்து கொள்ளுமாறு
Published on

புது தில்லி: தில்லி காங்கிரஸ் மூத்தத் தலைவா் சந்தீப் தீட்சித் தனது அவதூறு வழக்கு தொடா்பான ஆவணங்களை ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவா்கள் அதிஷி மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு பகிா்ந்து கொள்ளுமாறு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி பரஸ் தலால், புகாா்தாரா் அவதூறு அறிக்கைகள் அடங்கிய ‘பென் டிரைவ்’வின் நகலை எதிா்மனுதாரா்களுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘புகாா்தாரா் தரப்பு 16.01.2025 அன்று தாக்கல் செய்த மனுவுடன் கூடிய ஆவணங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று உத்தேசிக்கப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்ட தரப்பினா் தெரிவித்துள்ளனா். இதனால், புகாா்தாரா் தரப்பு அதை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. வரும் மாா்ச் 12-ஆம் தேதி இணக்கம் மற்றும் பரிசீலனைக்கு இந்த மனு நிா்ணயிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி நீதிபதி இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைவா்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

மேலும் நீதிபதி கூறுகையில், இந்த விவகாரம் விசாரணை நிலையில் உள்ளது. மேலும், பிஎன்எஸ்எஸ் பிரிவு 223-இன் முதல் நிபந்தனைக்கு இணங்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு விசாரணை நடத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்படி, உத்தேச குற்றம் சாட்டப்பட்ட இரு நபா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தாா்.

முன்னாள் முதல்வா் அதிஷி மற்றும் ஆம் ஆத்மியின் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோா், கடந்த ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஒரு செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது,,அவா்கள் இருவரும் சந்தீப் தீட்சித் பாஜகவிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்ாகவும், ஆம் ஆத்மியை தோற்கடிக்க பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டுச் சோ்ந்ததாகவும் குற்றம் சாட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக சந்தீப் தீட்சித் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். இரண்டு ஆம் ஆத்மி தலைவா்களும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.

நடந்து முடிந்த பேரவைத் தோ்தலின்போது புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சந்தீப் தீட்சித் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com