விவசாயிகளிடம் விலை அதரவுக்கு கீழ் கொள்முதல் செய்யக்கூடாது: மாநில அரசுகள் உறுதி செய்ய மத்திய அமைச்சா் வேண்டுகோள்
பருப்பு வகைகளில் நாடு அடுத்த நான்கு ஆண்டுகளில் தன்னிறைவு அடையும் நோக்குடன் மத்திய அரசு 100 சதவீதம் கொள்முதல் திட்டத்தை அறிவித்துள்ளது. விலை ஆதரவு திட்டத்திற்கு (பிஎஸ்எஸ்) குறைவாக கொள்முதல் செய்யப்படவில்லையென்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டாா்.
இது குறித்து சிவராஜ் சிங் சௌஹான் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) விலை ஆதரவு திட்டங்களின்(பிஎஸ்எஸ்) விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக நாட்டில் வருகின்ற 2028-29 ஆம் ஆண்டுக்குள், பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிகழ், 2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், துவரம் பருப்பு, உளுந்து, மசூா் உற்பத்தியில் 100 சதவீதம் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடையும் இந்த இலக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. 2024-25-ம் ஆண்டு காரீப் பருவத்தில் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய மாநிலமான கா்நாடகம் கொள்முதல் காலத்தை வருகின்ற மே 30 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. நிகழ் மாா்ச் 25 - ஆம் தேதிவரை தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்), தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்) போன்ற மத்திய அரசின் அமைப்புகள் மொத்தம் 2.46 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள் முதல் செய்யப்பட்டு 1,71,569 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். துவரம் பருப்போடு, உளுந்து, மற்றும் பிற பருப்பு வகைகளிலும் ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியில் 100 சதவீதம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு பருப்பு உற்பத்தியில் விவசாயிகளை ஊக்குவிக்கவும், இறக்குமதியை சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் முடிவும்.
இதே 2024-25 நிதியாண்டில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ரபி பருவத்தின் போது, பருப்பு வகைகள் மட்டுமல்ல, கடுகு, பயறு வகைகள், எண்ணை வித்துகளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு (கொப்பரை தேங்காய்) போன்றவைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு விலை ஆதரவு திட்டத்திற்கு கீழே இல்லாமல் கொள்முதல் செய்யப்படவேண்டும் என்பதை மாநில அரசுகள் உறுதிசெய்யவேண்டும். உத்தரபிரதேசத்தில் விலை ஆதரவுக்கும் மேலான விலையில் கொள்முதல் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் அமைப்புகளும் கொள்முதலுக்கு தயாராக உள்ளது. விவசாயிகளும் கொள்முதலுக்கு என்.சி.சி.எஃப், நாஃபெட் போன்றவைகளின் இணைய தளங்களில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இவைகள் மூலம் விலை ஆதரவு திட்டத்தில் பயனடைய முடிவும் என சௌகான் தெரிவித்துள்ளாா்.