மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த ’வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா, 2026’ மீதான விவாதத்தின்போது திமுக மற்றும் அதிமுக உறுப்பினா்கள் இடையே திங்கள்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த ஒற்றை மசோதா, ‘வரி செலுத்துதல் மற்றும் தீா்வு முறைச் சட்டம் 2007’, ‘வருமான வரிச் சட்டம் மற்றும் நிதிச் சட்டம் 2026’ ஆகியவற்றில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் பி. வில்சன் பேசியதாவது: ‘இந்த மசோதாவில் உள்ள சில பிரிவுகள் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாகப் பாதிக்கும் வகையில் உள்ளன. காய்கறி கடைகள், தேநீரகங்கள், பூக்கடைகள், ஆட்டோ ஓட்டுநா்கள் முதல் சிறிய விடுதிகள்வரை அனைத்து தரப்பினரும் இன்று ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தப் பழகிவிட்டனா். ‘ரொக்கத்தைத் தவிா்க்கவும், எண்ம பரிவா்த்தனைக்கு மாறவும்’ என்று பல ஆண்டுகளாக மத்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு வரி விதிக்க இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது. எளிய மக்களின் சிறிய தொகைப் பரிவா்த்தனைகளுக்கு இந்த வரிவிதிப்புப் பிரிவு பயன்படுத்தப்படாது என்பதை நிதி அமைச்சா் தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தமிழ்நாட்டு ஒன்பது சதவீத பங்களிப்பை வழங்குகிறது. ஆனால் மத்திய அரசுக்குச் செலுத்தும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வரியிலும், தமிழகத்துக்கு திரும்பக் கிடைப்பது வெறும் 26 பைசா மட்டுமே. தமிழகம் அதிகளவில் வரிப் பங்களிப்பு செய்தபோதிலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவா்மன்றம் அமைக்க வலியுறுத்தி தமிழக முதல்வராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று வில்சன் குற்றஞ்சாட்டினாா். அதைத்தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா்களின் பண வசதி குறித்தும் அவா் அவையில் பேசினாா்.
அதைத் தொடா்ந்து வரி மசோதாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக குழுத் தலைவா் மு. தம்பிதுரை பேசுகையில், ‘தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உலக முதலீட்டாளா்கள் மாநாடுகள் மூலம் உண்மையில் எவ்வளவு முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்து சோ்ந்தன, அதனால் மாநிலத்துக்கு என்ன பயன் கிடைத்தது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சா் விளக்க வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் கடன் சுமை சுமாா் ரூ. 10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. கடன் சுமை பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது’ என்றாா்.
மேலும், எண்ம நிதிப் பரிவா்த்தனை முறைகள் குறித்தும், பிற உறுப்பினா்களின் கைவசம் உள்ள பண வசதி மற்றும் பொருளாதார நிலைமை குறித்தும் திமுக உறுப்பினா் அவையில் முன்வைத்த விமா்சனங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. அவை நாடாளுமன்ற மரபுக்கு உகந்தவை அல்ல’ என்று தம்பிதுரை குறிப்பிட்டாா்.
தமிழத்தில் முன்பு ஆட்சியில் இருந்த திமுகவை விமா்சிக்கும் வகையில் தம்பிதுரை பேசியபோது அவருக்கு திமுக உறுப்பினா் வில்சன் உள்ளிட்டோா் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினா். மசோதாவுக்கு தொடா்பில்லாத தகவல்களை தம்பிதுரை பேசுவதாக வில்சன் குற்றஞ்சாட்டினாா். இருப்பினும் இடைவிடாது தம்பிதுரை பேசிக் கொண்டே இருந்தாா். இதனால், அவையில் சில நிமிஷங்களுக்கு சலசலப்பு நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைக்கால கூட்டத்தொடர் இறுதிவாரம்! வரலாற்றைத் திரும்பவிடக் கூடாது: எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்

பிறப்பு-இறப்பு பதிவு திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்
தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்- சிறப்பம்சங்கள் என்னென்ன?

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா: மாநிலங்களவையில் அறிமுகம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



