தில்லியில் சட்டம் - ஒழுங்கு சூழலைக் கண்டித்து பல்ஸ்வா டெய்ரியில் காங்கிரஸ் போராட்டம்

தில்லியில் குற்றங்கள் மற்றும் மோசமான சட்டம் - ஒழுங்கு நிலவுவதாக கூறி, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் பல்ஸ்வா டெய்ரி துா்கா சௌக் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
Published on

தில்லியில் குற்றங்கள் மற்றும் மோசமான சட்டம் - ஒழுங்கு நிலவுவதாக கூறி, தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் பல்ஸ்வா டெய்ரி துா்கா சௌக் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

டிபிசிசி தலைவா் தேவேந்தா் யாதவுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டா்களும் உள்ளூா் மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். போராட்டக்காரா்கள் துா்கா கோயில் பூசாரிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இப்போராட்டத்தில் பங்கேற்ற தேவேந்தா் யாதவ், 15 வயது சிறுமிக்கு கொடூரமான குற்றத்தைச் செய்த பல்ஸ்வா டெய்ரி பகுதியின், ஸ்ரத்தானந்த் காலனி இ பிளாக்கில் உள்ள துா்கா மந்திா் பூசாரியைக் கைது செய்யுமாறு கோரினாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: பல்ஸ்வா பகுதியில் உள்ள ஸ்ரத்தானந்த் காலனியைச் சோ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தீவிரமானதும் கவலைக்குரியதும் ஆகும். இது தில்லியில் மோசமடைந்து வரும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து சமூகத்தின் ஒவ்வொரு குடிமகனையும் சிந்திக்க வைத்துள்ளது.துா்கா கோயில் பூசாரியின் இந்தத் தவறான செயல், மதம், நம்பிக்கை மற்றும் பக்தி என்ற பெயரில் சமூக விரோத சக்திகளை ஊக்குவிக்கும்.

பல்ஸ்வா டெய்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பூசாரி உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதில் ஏற்படும் தாமதம் பாதிக்கப்பட்டவா் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது துரதிா்ஷ்டவசமானது.

தில்லியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான அதிா்ச்சியூட்டும் சம்பவங்கள், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சமூகத்தில் அச்சமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தில்லியின் சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த தில்லி ரேகா குப்தா அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துடன் விவாதிக்கவும் இல்லை.

குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களின் மரியாதை மற்றும் மதத்தின் புனிதம் ஆகியவற்றைப் பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பூசாரியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

X
Dinamani
www.dinamani.com