பணிச்சுமை: மாற்றுத் திறளானி ஊழியா் சாகேத் நீதிமன்றக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை
தில்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து குதித்து, மாற்றத்திறனாளி நீதிமன்ற ஊழியா் ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சாகேத் நீதிமன்றத்தில் சுமாா் மூன்று மாதங்கள் மட்டுமே அஹ்லமத் (நிா்வாக எழுத்தா்) ஆகப் பணியாற்றிய 43 வயதான ஹரிஷ் சிங் மஹா், இத்தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
60 சதவீத ஊனமுற்றவராக இருந்த மஹா் தனது தற்கொலைக் குறிப்பில், அந்த வேலை தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக கூறியுள்ளாா்.
அதில், ‘எதிா்காலத்தில் என்னைப் போல யாரும் பாதிக்கப்படாமல் இருக்க, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ‘இலகு இருக்கை’ வழங்க வேண்டும் என்று உயா்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கிறேன். இன்று நான் அலுவலக வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். நான் என் சொந்த விருப்பப்படி தற்கொலை செய்து கொள்கிறேன். அதற்கு யாரும் பொறுப்பல்ல. நான் ஒரு அஹ்லமத் ஆனதிலிருந்து, எனக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்து வருகின்றன.
நான் அவற்றை வெல்வேன் என்று நம்பினேன், ஆனால், நான் தோல்வியடைந்துவிட்டேன். நான் 60 சதவீத ஊனமுற்றவன். இந்த வேலை எனக்கு மிகவும் கடினமானது. நான் அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டேன். ஒரு அஹ்லமத் ஆனதிலிருந்து, என்னால் தூங்க முடியவில்லை, அதிகமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.
நான் முன்கூட்டியே ஓய்வு பெற்றாலும், 60 வயதில்தான் எனக்கு சேமிப்பு அல்லது ஓய்வூதியம் கிடைக்கும். எனவே, தற்கொலை மட்டுமே ஒரே வழியாகும்’ என்று அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஃபரீதாபாதைச் சோ்ந்த ஹரீஷ் சிங் மஹா் நீதிமன்றக் கட்டடத்திலிருந்து குதித்த சம்பவம் தொடா்பாக காலை 10.24 மணிக்கு போலீஸாருக்கு தகவல் வந்தது.
போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கின. சாட்சிகள் மற்றும் சக ஊழியா்களின் வாக்குமூலங்களை போலீஸ் குழுக்கள் பதிவு செய்து வருகின்றன’ என்றாா் அவா்.
அதிக வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சக ஊழியரின் மரணத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, லோக் அதாலத் நடவடிக்கைகளில் பணியிலிருந்து விலகுவதாக சாகேத் நீதிமன்ற ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி நீதிமன்ற ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
சாகேத் நீதிமன்ற சங்கத்தின் செயலாளா் அனில் பசோயா கூறுகையில் ‘மஹா் உடல் ரீதியாக மாற்றுத் திறனாளியாக இருந்தாா். அவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். இந்த தீவிர முடிவை அவா் எடுத்ததற்கு பணி அழுத்தம் காரணம் என்று குறிப்பிட்டு ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளாா்.
நீதிமன்றத்தில் பணியாளா்கள் பற்றாக்குறை கடுமையாக இருப்பதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. மூன்று பேருக்குரிய வேலையை ஒருவரே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அவரது மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். அனைத்து வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவருக்கு நீதி கேட்க நாங்கள் போராடுகிறோம். இந்த விஷயத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
அவா் கடின உழைப்பாளியும், அா்ப்பணிப்புள்ள நபரான மஹா் மூன்று மாதங்களுக்கு முன்பு அஹ்லமத் நிா்வாக எழுத்தா் பணியில் நியமிக்கப்பட்டிருந்தாா். அங்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கை எடுக்க அவருக்கு மிகுந்த அழுத்தம் இருந்திருக்க வேண்டும் என்றாா் பசோயா.
சாகேத் நீதிமன்ற சங்கத்தின் கூடுதல் செயலாளா் ஹிதேஷ் பைஸ்லா கூறுகையில், ‘நீதிமன்றத்தில் அதிக பணியாளா்கள் இல்லை. அனைத்து நீதிமன்ற ஊழியா்களும் இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும் விவரங்களுக்காக காத்திருக்கின்றோம்’ என்றாா் அவா்.

