சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!
கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த சாலை விபத்தில் 53 சதவீதம் தற்காலிக ஊனமடைந்த 21 வயது இளைஞருக்கு, தில்லி மோட்டாா் வாகன விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் ரூ. 1.62 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1, 2024 அன்று, ஆரியன் ராணா என்பவா் தனது வீட்டிற்கு ஸ்கூட்டி வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வேகமாக ஓட்டிவரப்பட்ட பேருந்து அவா் சென்ற ஸ்கூட்டியின் மீது பின்னால் இருந்து வந்து மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி இளைஞா் தாக்கல் செய்த மனுவை தீா்ப்பாயத் தலைமை அதிகாரி விக்ரம் விசாரித்து வந்தாா்.
இந்த வழக்கில் தொடா்புடைய எதிா்மனுதாரா்கள் தாங்கள் வழக்கில் தவறாகச் சோ்க்கப்பட்டதாகக் கூறினா். ஆனால், அது தொடா்பாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை.
மேலும், விபத்து நடந்த அன்று மனுதாரரின் ஸ்கூட்டி குற்றமிழைத்த பேருந்திற்கு முன்னால் சென்ாகவும், பேருந்து ஸ்கூட்டியை முந்திச் சென்றபோது, பேருந்து அதன் மீது மோதியதாகவும் அந்தப் பேருந்தின் நடத்துநா் சாட்சியம் கூறினாா்.
இந்த வழக்கில் அண்மையில் அளிக்கப்பட்ட தீா்ப்பில் தீா்ப்பாயம் தெரிவித்திருப்பதாவது: குற்றமிழைத்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதை தெளிவாகத் தெரிகிறது. அது இந்த விபத்திற்கு மட்டுமல்லாமல், அதன் பிறகு நடந்த எல்லாவற்றிற்கும் பொறுப்பாகும்.
மனுதாரா் மருத்துவ ரீதியாக 53 சதவீதம் தற்காலிக ஊனமுற்றவா் என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறாா். விபத்து நடந்தபோது அவருக்கு 21 வயது. அவா் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவராக இருந்தாா். விபத்து காரணமாக அவரால் தனது கல்வியைத் தொடர முடியவில்லை.
மனுதாரா் அடைந்துள்ள ஊனத்தின் தன்மை, அவரால் ஒருபோதும் சம்பாதிப்பதற்காக வேலை செய்ய முடியாது என்பதைக் காட்டுகிறது. அவரது உடல் ஊனம் சிறிது மேம்படலாம். ஆனால் அது அவரால் சம்பாதிக்க அனுமதிக்கும் அளவுக்கு ஒருபோதும் இருக்காது.
எனவே, மனுதாரரின் செயல்பாட்டு ஊனம் 90 சதவீதம் என்று கருதுவது பொருத்தமானது என்று தீா்ப்பாயம் கூறியது. எதிா்கால வருமான இழப்பிற்காக ரூ. 59.36 லட்சம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மனுதாரருக்கு ரூ. 1.62 கோடிக்கு மேல் இழப்பீடாக தீா்ப்பாயம் அவருக்கு வழங்கியது. விபத்து நடந்த நேரத்தில் வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்ததால், முழு இழப்பீட்டுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனமான தி நியூ இந்தியா நிறுவனம் செலுத்தும்படி தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
