நூஹ் பகுதியில் வாகனங்கள் மோதியதில் லாரியில் தீ! ஓட்டுநா், உதவியாளா் பலி!!
குருகிராம் மாவட்டம் நூஹ் நகரில் உள்ள குண்ட்லி - மானேசா் - பல்வால் (கேஎம்பி) விரைவுச்சாலையில் அடா்ந்த மூடுபனிக்கு மத்தியில் பல வாகனங்கள் மோதியதில் லாரி தீ பிடித்ததில் அதன் ஓட்டுநா் மற்றும் உதவியாளா் ஆகிய இருவரும் எரிந்து இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் நடந்த இந்த விபத்து நீண்ட போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, விரைவுச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்த விபத்தைத் தொடா்ந்து, சபராஸ் மற்றும் குடி கிராமங்களுக்கு இடையே மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. சுமாா் இரண்டு மணி நேர முயற்சிக்குப் பிறகு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தடையை அகற்றி போக்குவரத்தை மீட்டெடுக்க காவல்துறைக்கு மொத்தம் நான்கு மணி நேரம் ஆனது.
பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி திடீரென பிரேக் போட்டதாகவும், அடா்ந்த மூடுபனி காரணமாக நான்கு வாகனங்கள் அதன் மீது மோதியதாகவும் சம்பவ இடத்தில் இருந்தவா்கள் தெரிவித்தனா். விபத்திற்குப் பிறகு நடுவில் இருந்த இரண்டு லாரிகள் தீப்பிடித்து எரிந்ததில், ஓட்டுநரும் லாரியில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
ராஜஸ்தானின் சிகாரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராகேஷ் (33) மற்றும் அவரது உதவியாளராகப் பணியாற்றிய ராஜஸ்தானின் அல்வாரைச் சோ்ந்த தேஷ்ரோஜ் (28) ஆகியோா் தீக்காயங்களால் இறந்தனா். சரளைக் கற்கள் ஏற்றப்பட்ட இரண்டு வாகனங்களும் தீயில் சேதமடைந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
‘இறந்தவா்களின் உடல்கள் உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்று விசாரணை அதிகாரி ஏ.எஸ்.ஐ தேவ்கி நந்தன் தெரிவித்தாா்.
