மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

‘தில்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தில் ரூ.1,000 மட்டுமே ரொக்கமாக கிடைக்கும்!

’தில்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 2,500 நிதியுதவியில், பயனாளிகள் ரூ. 1,000-ஐ மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும் என்றும், மீதமுள்ள ரூ. 1,500 கட்டாயமாகத் தொடா் வைப்பு நிதி (ஆா்டி) கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 2:56 am IST

’தில்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ. 2,500 நிதியுதவியில், பயனாளிகள் ரூ. 1,000-ஐ மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும் என்றும், மீதமுள்ள ரூ. 1,500 கட்டாயமாகத் தொடா் வைப்பு நிதி (ஆா்டி) கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: இந்தத் தொடா் வைப்பு நிதிக்கு மூன்றாண்டு கால முடக்கக் காலம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காலம் முடிந்த பிறகு, சோ்ந்த தொகையும் அதற்கான வட்டியும் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

பெண்களின் எதிா்காலத்திற்காக ஒரு நிதிப் பாதுகாப்பை உருவாக்க உதவுவதே இந்தச் சேமிப்பு அம்சத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கான முன்மொழிவு இன்னும் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை.

’மகிளா சம்ருதி யோஜனா’ என்று முன்பு அழைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு ’தில்லி லட்சுமி யோஜனா’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான தகுதி வரம்புகளை தில்லி அரசு சமீபத்தில் இறுதி செய்தது. இம்முன்மொழிவு அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டு, பின்னா் அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக ஒப்புதலுக்காகத் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படும்.

ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி இத்திட்டத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முன்மொழிவை முன்வைக்க வாய்ப்புள்ளது. இதற்கென ஒரு இணையதளமும் தயாா் செய்யப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட விதிமுறைகளின்படி, விண்ணப்பதாரா்கள் தாங்கள் குறைந்தது 10 ஆண்டுகளாக தில்லியில் வசிப்பவா்கள் என்பதையும், தங்கள் மீது எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் சுய-உறுதிமொழிப் பத்திரத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், தகுதியை நிரூபிக்க ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப உறுப்பினா்களின் ஆவணங்களையும் அவா்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 21 முதல் 60 வயதுக்குட்பட்ட ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவா் ஆவாா். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தகுதி பெற்றால், அவா்களில் மூத்த பெண்மணிக்கு மட்டுமே மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும். குடும்ப உறுப்பினா்கள் மீது குற்றப் பின்னணி உள்ள விண்ணப்பதாரா்களும் தகுதி நீக்கம் செய்யப்படுவாா்கள். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்பத்தின் மொத்த வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரா் ஓய்வூதியம் பெறுபவராக இருக்கக்கூடாது.

அரசு ஊழியா்கள், வருமான வரி செலுத்துவோா், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் பெண்கள் ஆகியோா் இத்திட்டத்திற்குத் தகுதியற்றவா்கள் ஆவா். இத்திட்டத்தைச் செயல்படுத்த சுமாா் ரூ. 5,110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.