’சலோ சன்சத்’ போராட்டத்தின் போது காயமடைந்த காவலா்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், வன்முறை மற்றும் சேதங்களை ஏற்படுத்தியவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதற்கும், ஜூலை 31 அன்று ஜந்தா் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் (தா்னா) நடத்த முன்னாள் தில்லி காவலா்கள் அனுமதி கோரியுள்ளனா்.
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) ஜூலை 20 அன்று தில்லியில் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. பிரதான் சனிக்கிழமையன்று பதவி விலகியதைத் தொடா்ந்து, ஒரு மாதமாக நடைபெற்று வந்த சிஜேபி-யின் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தில்லி காவல் ஆணையா் அனுராக் குமாருக்கு எழுதிய கடிதத்தில், ’தில்லி போலீஸ் மகாசங்கம்’ (ஓய்வுபெற்ற பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத அதிகாரிகள் சங்கம்), ஜந்தா் மந்தரில் உள்ள குறிப்பிட்ட போராட்ட இடத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளது.
சலோ சன்சத் போராட்டத்தின் போது பணியில் இருந்தபோது காயமடைந்த தில்லி காவலா்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவும், அவா்களின் மன உறுதியை அதிகரிக்கவும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
தில்லி காவல்துறையின் தகவலின்படி, ‘சலோ சன்சத்‘ போராட்டத்தின் போது 200-க்கும் மேற்பட்ட காவலா்களும், 65-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களும் காயமடைந்தனா். மோதல்களின் போது 15-க்கும் மேற்பட்ட காவல் வாகனங்கள் சேதமடைந்ததாகவும் காவல்துறை கூறியிருந்தது.
போராட்டத்தின் போது காவலா்கள் மீதான தாக்குதல் மற்றும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘தொடா் குற்றவாளிகள், சமூக விரோதிகள், ரவுடிகள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவா்கள்‘ மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்த விரும்புவதாக சங்கம் கூறியது.
ஜந்தா் மந்தரில் உள்ள குறிப்பிட்ட போராட்ட எல்லைக்குள் மட்டுமே கூட்டம் நடைபெறும் என்றும், நாடாளுமன்றம் அல்லது சென்ட்ரல் விஸ்டா நோக்கி செல்லும் பேரணி நடத்தப்படாது என்றும், தற்காலிக கட்டமைப்புகள் அல்லது கூடாரங்கள் அமைக்கப்படாது என்றும், ’பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா’ (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி காவல்துறையினருடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என்றும், ஆயுதங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்படாது என்றும், பாதசாரிகள் அல்லது வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாது என்றும் அமைப்பாளா்கள் உறுதியளித்துள்ளனா்.
நாடாளுமன்றச் சாலை பகுதியின் முன்னாள் உதவி காவல் ஆணையரும் (ஏசிபி) சங்கத்தின் தலைவருமான வேத் பூஷண், இந்தப் போராட்டத்தில் அமைதியான முறையில் பங்கேற்ற மாணவா்களுக்கு எதிரான கோரிக்கை இதுவல்ல என்று கூறினாா்.
‘அங்கு அமைதியான முறையில் போராடிய மாணவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், குற்றவியல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டவா்கள், காவலா்கள் மீது கல்வீசியவா்கள் மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தியவா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவா்கள் கைது செய்யப்பட வேண்டும்’ என்று பூஷண் தெரிவித்தாா்.
மேலும், ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை மற்றும் கல்வீச்சுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும், குற்றப் பின்னணி கொண்ட 2,800-க்கும் மேற்பட்ட நபா்களைக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முடிவுக்கு வந்த 36 நாள் மாணவா் போராட்டம்: ஜந்தா் மந்தரில் அமைதி திரும்பியது!

சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லி ஜந்தா் மந்தரில் இணையச் சேவை முடக்கம்

தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!
தில்லி பல்கலைக்கழகத்தின் 2026-27 அமா்வுக்கான கல்வி நாள்காட்டி வெளியீடு: ஜூலை 28 முதல் வகுப்புகள் தொடக்கம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


