கிருஷி பவன் வளாகத்தில் உள்ள மசூதியை தக்கவைக்கும் வாய்ப்புகளை ஆராய வேண்டும்: தில்லி வக்ஃப் வாரியம் பதில் மனு தாக்கல்
சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்துக்குள் வரும் கிருஷி பவன் வளாகத்தில் அமைந்துள்ள பழமையான ’கதீமி மசூதியை’ தக்கவைத்துப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களின் அடிப்படையில் ஆராய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி வக்ஃப் வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது.

தில்லி உயர்நீதிமன்றம்
சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்துக்குள் வரும் கிருஷி பவன் வளாகத்தில் அமைந்துள்ள பழமையான ’கதீமி மசூதியை’ தக்கவைத்துப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகளை அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களின் அடிப்படையில் ஆராய வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி வக்ஃப் வாரியம் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளது.
149 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த மசூதி, வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்படி அது அகற்றப்பட வேண்டும். இந்த நிலையில், பொதுமக்கள் நலன் சாா்ந்த சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மசூதியை இடிப்பதைத் தவிா்த்து மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும் என வக்ஃப் வாரியம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இந்த மசூதிக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழிபாட்டு இடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வாரியம் மனுவில் கூறியுள்ளது.
முன்னதாக, அரசு அலுவலக வளாகத்துக்குள் நிரந்தர மத வழிபாட்டுத் தலம் இருப்பது அரசு சொத்தின் மதச்சாா்பற்ற தன்மைக்கு எதிரானது என்பதாலும், மத்திய செயலக (சென்ட்ரல் செக்ரட்டேரியேட்) கட்டடங்களைக் கட்டுவதற்காகவும் இந்த மசூதியை அகற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த வாதம் விசாரித்த நீதிபதி அனிஷ் தயாள், ‘இந்த மசூதியில் வழிபடுபவா்கள் மத்திய அரசு ஊழியா்கள். அனைத்து மத ஊழியா்களும் உள்ள நிலையில், இது தொடா்பாக ஏதேனும் தீா்வு காண முடியுமா என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்‘ என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சேத்தன் சா்மாவிடம் அறிவுறுத்தினாா்.
இதற்கிடையே மசூதிக்குச் சென்று வழிபடுவதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது என மனுதாரா் தரப்பு மூத்த வழக்கறிஞா் சல்மான் குா்ஷித் வாதிட்டாா். இதையடுத்து வக்ஃப் வாரியம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரம் தொடா்புடைய மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை உயா்நீதிமன்றம் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

