இந்திய அரசியலின் போக்கை மாற்றியது ஆம் ஆத்மி: நிறுவன நாள் விழாவில் அரவிந்த் கேஜரிவால் பெருமிதம்
ஆம் ஆத்மி கட்சி இந்தியாவில் ‘அரசியல் போக்கையே மாற்றிவிட்டது‘ என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால்
நமது நிருபா்
ஆம் ஆத்மி கட்சி இந்தியாவில் ‘அரசியல் போக்கையே மாற்றிவிட்டது‘ என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
2012-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், அக்கட்சி தனது நிறுவன நாளை வியாழக்கிழமை கொண்டாடியது.
இதையொட்டி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கேஜரிவால், தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி அமைத்தது உள்ளிட்ட கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டாா். ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் எதிா்காலம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட போதிலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டு மக்களின் நம்பிக்கையை ஆம் ஆத்மி பெற்றுள்ளதாக அவா் கூறினாா்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: மிக குறுகிய காலத்தில் நாங்கள் வெகுதூரம் கடந்து வந்துள்ளோம். ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டபோது, எங்களைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டன. எங்களால் எதையாவது சாதிக்க முடியுமா? இந்த கட்சி எத்தனை காலத்துக்கு நீடிக்கும்? இவா்களுக்கு அரசியலைப் பற்றி என்ன தெரியும்? என்றெல்லாம் கேட்டாா்கள்.
ஆனால் நாங்கள் நிலைத்து நின்றது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டின் இதயங்களையும் வென்றோம். தில்லியில் ஆட்சி அமைத்தோம், பஞ்சாபில் ஆட்சி அமைத்தோம், ஜம்மு-காஷ்மீா் முதல் கோவா மற்றும் குஜராத்வரை என இந்திய மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றோம்.
மக்களுக்கான பணிகளைச் செய்து முடிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து பேசினோம். இங்கு நிலவும் அரசியலால் எங்களை மாற்ற முடியவில்லை. மாறாக, நாங்கள் இந்த அரசியலின் போக்கை மாற்றினோம். நாட்டுக்காக இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. எங்கள் கட்சி எதற்கும் அஞ்சாது, பின்வாங்கவும் செய்யாது என்று அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

