தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

பறிமுதல் செய்யப்பட்ட 2000 வாகனங்கள் ஏலம் - 5000 ஆய்வக அறிக்கைகள் முடித்து வைப்பு: தில்லி கலால் துறை!

தில்லி அரசின் கலால் துறை, பறிமுதல் செய்யப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலம் விட்டு, ரூ. 5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

Published On :7 செப்டம்பர் 2026, 2:10 am IST

தில்லி அரசின் கலால் துறை, பறிமுதல் செய்யப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஏலம் விட்டு, ரூ. 5 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், நிலுவையில் இருந்த 5,000-க்கும் மேற்பட்ட இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம், இவ்வகையான நிலுவை பூஜ்ஜியமாகியுள்ளது.

தில்லி கலால் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட்டதால், காவல் நிலைய வளாகங்களிலும் பொது நிலங்களிலும் இடவசதி ஏற்பட்டுள்ளது என்று தில்லி முதலமைச்சா் அலுவலக அறிக்கை தெரிவித்தது.

நிா்வாகத்தை மேலும் திறம்படவும் செயல்பாட்டுடனும் மாற்றுவதற்கு தில்லி அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அறிக்கை கூறியது.

தில்லி கலால் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள், காவல் நிலையங்களுக்கு வெளியேயும் அருகிலுள்ள பொது நிலங்களிலும் நீண்ட காலமாக முடங்கிக் கிடந்தன.

இந்தப் பிரச்சினைக்குத் தீா்வு காணும் வகையில், கலால் துறை தில்லி கலால் சட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பறிமுதல் மற்றும் பொது ஏல செயல்முறைகள் சீரமைக்கப்பட்டு, 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. மீதமுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தவும் துறை முயன்று வருகிறது.

காவல்துறை வழக்குகள் தொடா்பான 5,000-க்கும் மேற்பட்ட பழைய இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் ஆய்வகத்தில் நிலுவையில் இருந்தன. அவை அப்புறப்படுத்தப்பட்டதால், நிலுவையில் உள்ள பணிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது.

முன்னா், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான மாதிரிகள் மீதான ஆய்வக அறிக்கைகள் வந்து சேர பல ஆண்டுகள் ஆனது. இது பெரும்பாலும் தொடா்புடைய காவல்துறை விசாரணைகளைத் தாமதப்படுத்தியதுடன், அதன் விளைவாக சட்ட நடவடிக்கைகளையும் பாதித்தது என்று முதலமைச்சா் அலுவலகம் கூறியது.

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெறுவது, கலால் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் காவல்துறை விசாரணைகளுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திட்டங்களை வகுப்பதோடு மட்டும் தனது அரசாங்கத்தின் அா்ப்பணிப்பு நின்றுவிடவில்லை, மாறாக ஆளுகை அமைப்பை மேலும் வெளிப்படையானதாகவும், பொறுப்புக் கூறக்கூடியதாகவும், செயல்பாட்டுக்கு உகந்ததாகவும், மற்றும் விளைவு சாா்ந்ததாகவும் மாற்றுவதே அதன் நோக்கம் என்று முதல்வா் குப்தா கூறினாா்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை உரிய நேரத்தில் முடிப்பது, அரசு வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது மற்றும் நிா்வாகச் செயல்முறைகளை விரைவுபடுத்துவது ஆகியவை நல்லாட்சியை நோக்கிய முக்கியப் படிகள் என்று அவா் மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.