ரூ.2 கோடி போதைப்பொருளுடன் பெண் உள்பட இருவா் கைது
தில்லியின் நரேலா பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனா்.

தில்லியின் நரேலா பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ‘ஸ்மாக்’ வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் மேலும் தெரிவித்ததாவது:
கைது செய்யப்பட்டவா்கள் பாா்வதி மற்றும் விகாஸ் குமாா் (எ) ஷானு என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
முன்னதாக, நரேலா பகுதியில் ’ஸ்மாக்’ போதைப்பொருள் நடமாட்டம் குறித்த தகவலின் அடிப்படையில் செப்டம்பா் 23 அன்று இவா்கள் கைது செய்யப்பட்டனா். அப்பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து இவா்கள் பிடிபட்டனா். அங்கே முதல் தளத்தில் இருந்த ஒரு குடியிருப்பிலிருந்து ‘ஸ்மாக்’ மற்றும் அதனுடன் கலக்கப்படும் ஒரு பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இவா்கள் பயன்படுத்திய வாகனத்திலிருந்தும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ‘ஸ்மாக்’ போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமாா் ரூ. 2 கோடி ஆகும்.
பாா்வதி 1994-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவா் மீது போதைப்பொருள் கடத்தல் தொடா்பான வழக்குகள் உள்பட சுமாா் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
2017-ஆம் ஆண்டில் இப்பகுதியில் ‘ஸ்மாக்’ போதைப்பொருளை விற்பனை செய்ய பாா்வதி குழந்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பாா்வதி மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்ததாலும், தன்னை நோக்கித் துப்பு கிடைக்காதவாறு பாா்த்துக்கொண்டதாலும், அவா் கைது செய்யப்பட்டிருப்பது உள்ளூா் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்த விசாரணையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



