தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பெரியபுராண ஆய்வுரைக் களஞ்சியம்

News image
Updated On :19 டிசம்பர் 2022, 7:19 am

DIN

பெரியபுராண ஆய்வுரைக் களஞ்சியம் - பதிப்பாசிரியர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்; பக். 230; ரூ. 150, திலகவதியார் திருவருள் ஆதீனம்,  புதுக்கோட்டை. 9789182825.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலை. தமிழ்ப் பண்பாட்டு மையம், மெய்யியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஆதீனம் நடத்திய 'பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்'  கருத்தரங்க மாநாட்டில் இடம்பெற்ற 15 கருத்தாளர்களின் ஆய்வுரைகளின் தொகுப்பு இது.

இலக்கியத் திறம், சமத்துவம், சொல்லாட்சித் திறன், சொல்லறம், கலைகள், இசைத் தமிழ், மகளிர், சைவநெறி, அடியார் பெருமை, பூகோளப் பார்வை, யாப்பியல் கோட்பாடுகள், படைப்பின் நோக்கம், பக்தி நெறி, உயிரினங்கள் மற்றும் பெரிய புராணத்திலும் விஞ்சிய தனித்துவத்திலும் தேவார மூவர் என்பன ஆய்வுத் தலைப்புகள் என்றபோதிலும் ஒவ்வொன்றுமே தனித் தனி நூலாக விரித்து எழுதக் கூடியவை.  ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் புதுப்புது நீதிகளை உணர்த்தும் பெரியபுராணத்தைப் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரைகளின் வழியேயும் ஏராளமான புதிய  தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

பெரியபுராணத்தை சமூகப் புரட்சி வரலாற்று நூல் என்று கூறும் உலகநாயகி பழனி, பத்து வகையான சாதிகள் பற்றிய செய்திகள் கூறப்பட்டு, சாதியமைப்பைச் சாடுவதாகவே பாடப்பட்டுள்ளது என்கிறார்.

சொல்லாட்சித் திறன் பற்றிக் குறிப்பிடும்போது, கட்டும்புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய... என்ற சொல் வரிசை முறை, அழுக்கு கந்தையைத் துவைத்த முறை போன்றவற்றை எடுத்துக்காட்டுகிறார் மா. சிதம்பரம்.

கலைகள் பற்றிய கட்டுரையில் கட்டடக் கலை உள்பட அத்தனை கலைகள்  பற்றியும் ஏராளமான தகவல்களைத் தேடித் தேடித் தந்துள்ளார் செ. கற்பகம்.

கொண்டானிற் சிறந்த தெய்வமில்லை  என்று கற்பிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களிடையே கணவனால் புறக்கணிக்கப்பட்டபோதிலும் புனிதவதி எவ்வாறு துறவறம் பூண்டு காரைக்கால் அம்மையார் ஆனார் என மகளிர் பற்றிய கட்டுரையில் விவரிக்கிறார் உதவிப் பதிப்பாசிரியர் க. திலகவதி.

யாப்பியல் கோட்பாடுகள் பற்றிய கட்டுரையில் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, பெரியபுராணத்தை ஒரு சைவநெறி இசைத் தமிழ்க் காப்பியம் என நிறுவுகிறார் சண்முக செல்வகணபதி.  வாசகர்களுக்கு புதிய அனுபவம், அறிமுகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.