
ஓகி - றின்னோஸா
சராசரி இளைஞனான ஓகி மேற்கொள்ளும் ஓர் அவலமான பயணமே இந்த நாவல்.

ஓகி - றின்னோஸா; பக். 248; ரூ.290; சுவாசம் பதிப்பகம்; சென்னை 600 127; ✆ 81480 66645.
அரிய பொக்கிஷங்களின் பூமியான ஆப்பிரிக்கா, சர்வதேச சுரண்டல்களால் வறுமையும், வன்முறையும் நிறைந்த இருளில் தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புதிய வாழ்வைத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் சிரமத்துடன் செல்கின்றனர். அவர்களில் ஒருவனாக சராசரி இளைஞனான ஓகி மேற்கொள்ளும் ஓர் அவலமான பயணமே இந்த நாவல்.
சஹாரா பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள நைஜர் நாட்டின் தஹெளவா பிராந்தியத்தில் டாஸாரா எனும் கிராமத்தில் பெற்றோர், அக்காள், சகோதரர்களுடன் வசித்துவருகிறான் ஓகி. யுரேனிய சுரங்கத்தில் வேலை செய்துவரும் ஓகி, தனது குடும்பத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்பதற்காக நண்பன் சிப்ஸுடன் ஐரோப்பாவுக்கு செல்ல முடிவு செய்கிறான்.
பெரும் சிரமத்துக்கிடையே பணம் சேர்த்து ஏஜென்டுகளிடம் கொடுத்து, கிடைத்த வாகனங்களில் ஏறி பாலைவன நகரங்களைக் கடந்து, ஒருவழியாக லிபியா நாட்டைச் சென்றடைகிறார்கள் ஓகியும், சிப்ஸும். அங்கு கையில் இருக்கும் பணமெல்லாம் தீர்ந்துபோக, கடினமான வேலைகளைச் செய்து பணம் சம்பாதித்து இத்தாலியை நோக்கி ஒரு ரப்பர் படகில் நூற்றுக்கு மேற்பட்டோருடன் சேர்ந்து இறுதிப் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்கள் நோக்கம் நிறைவேறியதா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது.
சொந்த ஊரைப் பிரிந்து செல்லும் ஓகியின் துயரம், அவனைப் பிரிய மனமின்றி, வேறு வழியுமின்றி தவிக்கும் அவனது குடும்பத்தினரின் உணர்வுகள், லிபியாவில் கொடூர வாழ்க்கைக்கு
மத்தியில் ஒரு வசந்தம்போன்று வந்து செல்லும் சோமாலிய பெண்ணான நாடாலியாவின் அன்பு, இரக்கம் என மனிதர்களின் கலவையான உணர்வுகளை அற்புதமான எழுத்தில் வடித்திருக்கிறார் நாவலாசிரியர். ஓகியின் வலியை வாசகர்களுக்குக் கடத்தும் வலிமையான எழுத்துகள் நாவலுக்கு பலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






