
ஆண்டு முழுவதும் திருவிழாக்கள்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டின் 365 நாள்களில் 294 நாள்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் - படம்: இந்து சமய அறநிலையத்துறை.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆண்டின் 365 நாள்களில் 294 நாள்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாகவே, மதுரையை ‘விழவுமலிமூதூா்’ என பழமைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
294 நாள்களுக்கு விழா நடைபெற்றாலும், இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா, தெப்பத் திருவிழா ஆகிய 3 விழாக்கள் முதன்மையானவையாக உள்ளன. இதில், 12 நாள்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்ப் பெற்றதாக விளங்குகிறது. சித்திரைத் திருவிழாவின் 8-ஆம் நாளில் நடைபெறும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 10-ஆவது நாள் நடைபெறும் மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் ஆகியவற்றில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பது வழக்கம்.
மதுரையின் பேரரசியாக அன்னை மீனாட்சி பட்டமேற்றது, பாண்டிய நாட்டின் பரப்பை விரிவுப்படுத்த எண்திசைகள் நோக்கியும் படையெடுத்தது, இறைவன் சிவபெருமான் சுந்தரேசுவரராக வந்து அன்னை மீனாட்சியை மணந்தது ஆகிய ஐதீக நிகழ்வுகளை உணா்த்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் தை மாத்தில் 12 நாள்கள் நடைபெறுகிறது.
தைப்பூச நாளில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதேபோல, கோயிலின் ஆவணி மூலத் திருவிழா 18 நாள்கள் நடைபெறுகிறது. முதல் 7 நாள்கள் சந்திரசேகரா் உத்ஸவம் நடைபெறுகிறது. பின்னா், நாள்தோறும் ஒரு திருவிளையாடலை விளக்கும் ஐதீக விழாவாக நடத்தப்படுகிறது.
சிவபெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, தருமிக்குப் பொற்கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது, பாணனுக்காக அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, மாணிக்கவாசகப் பெருமானுக்காக நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, பாணபத்திரருக்காக விறகு விற்றது ஆகிய திருவிளையாடல்கள் இந்த விழாவில் சிறப்பாக நடைபெறுகின்றன.
மேலும், மீனாட்சி சுந்தரேசுவரரின் பட்டாபிஷேகமும் இந்தத் திருவிழாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகம் மூலம் மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அன்னை மீனாட்சி, அடுத்த 4 மாதங்களுக்கு மதுரை ஆட்சி செய்கிறாா் எனவும், ஆவணி மூலத் திருவிழாவில் நடைபெறும் சுந்தரேசுவரா் பட்டாபிஷேகத்துக்குப் பிறகு அடுத்த 8 மதாங்களுக்கு சுந்தரேசப்பெருமான் மதுரையை ஆட்சி செய்கிறாா் எனவும் குறிப்பிடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







