ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள்

ஸ்ரீ கிருஷ்ணன் திருவிளையாடல்கள் பல செவி வழி செய்திகளாக அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை நாம் இப்போது அனுபவிப்போம்.  
ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள்
ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் புராண கதைகளை எப்பொழுது படித்தாலும் மனதுக்கு இனிமையாக இருக்கிறது. மதுரா நகரில் "பாங்கே பிஹாரி" என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவிளையாடல்கள் பல செவி வழி செய்திகளாக அவ்வப்போது உலா வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றை நாம் இப்போது அனுபவிப்போம்.  

வெகு நாட்களுக்கு முன்பு பிருந்தாவன ஷேத்திரத்தில் "ஸ்ரீ பாங்கே பிஹாரிஜி மந்திர்" என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் திருக்கோயில் இருக்கிறது. அழகே உருவான ஸ்ரீ கிருஷ்ணர் அங்குத் திருக்கோயில் கொண்டு ஸேவை சாதிக்கிறார். கையில் புல்லாங்குழல், தலையில் மயில் பீலி, இடுப்பில் பட்டு வஸ்திரம், கூடவே வெண்மை நிறமான பசுவும், கன்றும் கொண்டுள்ள கிருஷ்ணனைப் பார்க்க எப்போதும் பக்தர்கள் வந்து கொண்டு இருப்பார்கள். வரும் போது கையில் சீடை, முறுக்கு, லட்டு, ஜாங்கிரி முதலான தின்பண்டங்களை கொண்டு வந்து சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.  

அந்தக் கோயிலில் ஒரு குருக்கள் பூஜை செய்து கொண்டு வந்திருந்தார். அவர் மிகுந்த பக்தி பாவத்துடனும், மனம் உருகியும் கைங்கர்யம் செய்து கொண்டு வந்திருந்தார். அபிஷேக, ஆராதனைகளைத் தவிர திருப்பள்ளி அறையை மிகுந்த கவனத்துடன் நேர்த்தியாக அழகுபடுத்தி, படுக்கையை விரித்து, அதன் மீது மலர்களைத் தூவி, வாசனைத் திரவியங்களை தெளித்து, புதியதாக தோரணங்கள் கட்டி, படுக்கையின் அருகில் பழங்கள், ஜலம் இவற்றை வைப்பார். சயன ஆரத்தி சமயத்தில் ஒரு சிறியதாக கிருஷ்ண விக்ரஹத்தினை படுக்கையில் வைப்பது வழக்கம். தவிர, இரவு நேரத்தில் கிருஷ்ணன் விழித்து எழுந்தால், கிருஷ்ணனுக்குப் பசிக்குமே என்று அவருக்கு ஆதங்கம். அதனால், மாலை வேளைக் கோயிலுக்கு வரும் போது ஒரு தின்பண்ட கடையில் நான்கு லட்டுக்களை வாங்கி வருவார். அந்த லட்டுக்களைப் படுக்கையின் அருகில் ஒரு தட்டில் வைத்து மூடி வைக்கும் வழக்கத்தினை கொண்டு இருந்தார். அவ்வளவு பக்தி பாவம் அவருக்கு.

ஆனால் என்ன ஆச்சரியம்.. காலையில் படுக்கையிலும், தரையிலும் லட்டுக்களின் துகள்கள் சிதறிக் கிடக்கும். இது தினமும் நடக்கும். தன்னுடைய லட்டுக்களைப் பகவான் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டான் என்று எண்ணம் அவருக்கு வேரூன்றி இருந்தது. இது ஒரு சிலருக்கு மாத்திரம்தான் தெரியும்.  

ஒரு நாள் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், வரும் போது அவர் 4 லட்டுக்களைக் கோயிலுக்கு வரும் போது வாங்கி வரவில்லை. மறந்துவிட்டார். அன்று இரவு சயன அறையைத் தயார் செய்து விட்டு, கிருஷ்ண விக்ரஹத்தினை வைத்து விட்டு ஆரத்தி எடுத்தபிறகு இல்லம் வந்து சேர்ந்தார் அவர்.  

அன்று இரவு 2 மணி அளவில், ஊர் அடங்கிய பிறகு, எந்தத் தின்பண்ட கடையில் அவர் லட்டு வாங்குவாரோ அந்தக் கடையின் முதலாளி கடையை சார்த்த முற்பட்டார். அப்பொழுது ஒரு சிறுவன் கடை முதலாளியிடம் ஓடி வந்து தனக்கு பசிக்கிறது என்றும் லட்டு வேண்டும் என்று கேட்க, கடை முதலாளி லட்டு தீர்ந்து விட்டது, நாளை காலை புதியதாக வரும் அப்போது வா அல்லது வேறு ஏதாவது வாங்கிக்கொள் என்றார். அதற்கு தனக்கு லட்டுதான் வேண்டும் உள்ளே சென்று பாருங்கள் 4 லட்டுக்கள் இருக்கும் என்றான் சிறுவன். தன் கடையை பற்றி இந்தச் சிறுவனுக்கு எப்படித் தெரியும் என்று சந்தேகத்துடன் கடைக்கு உள்ளே சென்று பார்த்தால், குருக்களுக்காக எடுத்து வைத்திருந்த நான்கு லட்டுகளும் அப்படியே இருந்தன. அப்போது தான் அவர் நினைவுக்கு குருக்கள் அன்று வராது இருந்தது நினைவுக்கு வந்தது. அந்த லட்டுக்களை சிறுவனிடம் கொடுத்த கடைக்காரர், அதற்கான பணத்தை கேட்டார். சிறுவன் அவரிடம் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னவுடன், அவரிடம் சிறுவன் தன்னிடம் இருந்த வைர கற்கள் பதித்த கங்கணத்தை கொடுத்தான். அவர் வாங்க மறுத்த போது அக்கடையின் உள்ளே வீசி எறிந்து விட்டு ஓட்டம் பிடித்தான் அச்சிறுவன்.

இதையும் படிக்கலாமே.. குழந்தை பாக்கியம்பெற கோகுலாஷ்டமியில் பூஜை
 
​மறுநாள் பொழுது புலர்ந்தது. வழக்கம் போல கோயிலின் நடை திறக்கப்பட்டது. அங்கு குருக்கள் மற்ற ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். அனைத்து நகைகளும் மிகவும் பத்திரமாக இருக்க "ஒரு கங்கணத்தை மாத்திரம் காணவில்லை". என்ன சோதனை!!! திருடன் வந்தால் அனைத்து நகைகளையும் அல்லவா எடுத்துச் சென்றிருப்பான், ஒரு கங்கணத்தை மாத்திரம் ஏன் எடுக்க வேண்டும்? செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. கடைக்காரருக்கும் தெரிய வந்தது. அப்போதுதான் புரிந்தது "முந்தைய நாள் சிறுவன் உருவில் இரவு வந்தது கிருஷ்ணன் என்று"  மிகுந்த மகிழ்ச்சியுற்ற அவர், உடனடியாக கங்கணத்தை எடுத்துக் கொண்டு கோயில் வந்தடைந்தார். குருக்களிடமும், ஏனைய ஊழியர்களிடமும் சிறுவன் வந்த விஷயத்தைச் சொல்ல "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா" என்னும் பக்தி கோஷம் விண்ணைப் பிளந்தது.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com