பஞ்சபூதத்தலங்கள் - ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
பஞ்சபூதத்தலங்கள் - ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்

600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தைக்  குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக  விளங்குகிறது. தேவாரம் பாடல் பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்..

மூலவர்: ஏகாம்பரேஸ்வரர்,ஏகாம்பரநாதர், திருவேகம்பர்

தாயார்: ஏலவார்குழலி

விருட்சம்: மாமரம்

தீர்த்தம்: சிவகங்கை(குளம்)

திருத்தல வரலாறு

இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூஜிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு  கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூஜித்தார். அப்பொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார்  பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் சிவனுக்கு தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று.

மாமரத்தைத் கொண்டுள்ளமையால் இப்பெயர் பெற்றது ஆமரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப்படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.

இது முத்தி தரும் தலங்கள் ஏழினுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும்  மறையப்பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தலவெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். 

இங்குபிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூஜித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும்  பெயர்களுடன் விளங்குகின்றன.

இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவைசமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில்  கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும்  ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும்  இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம்  மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை  வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது. 

ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்..

இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல  இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது.  இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. 

இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம்மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச்  சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது. இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடு சேர்ந்துவிட்டன.
 
இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன.  முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.

திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச்சிவஞானயோகிகள் அருளிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் அருளியதும், அதனுடைய இரண்டாங்காண்டமென்று  சொல்லப்படுவதுமாகிய காஞ்சிப்புராணமும், கச்சியப்பமுனிவர் இயற்றிய கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டுவிடுதூதும், இரட்டையர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலாவும்,  பட்டினத்துப்பிள்ளையார் அருளிய திருவேகம்ப முடையார் திருவந்தாதியும், மாதவச்சிவஞான யோகிகள் அருளிய கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு, திருஏகம்பர் (யமக) அந்தாதி ஆகிய இவைகளும் இத்தலத்தைப்பற்றிய நூல்களாகும்.

கல்வெட்டுக்கள்

1. திருக்கோயிலின் முன்னால் இருப்பதும் மேற்குப் பார்வையுள்ளதும் மயானேசுவரர் ஆலயம். அதில் மட்டும் பதினைந்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டன. அவைகளில்  காகதீயகணபதி (கி.பி.1250) சோழர்களில் உத்தமன், இராசராசன், இராசாதிராசன், குலோத்துங்கன், இராசராசன் விஜய கண்ட கோபாலன், விஜயநகர சதாசிவன்  முதலியோர்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தம சோழன் கல்வெட்டில் வீரராணியார் அவன் தேவி எனக் கூறுகிறது.

2. நடராசர் மண்டபத்தில் புக்கராயன் (கி.பி. 1406) கல்வெட்டு மூன்று இருக்கின்றன.

3. ஆயிரங்கால் மண்டபத்தில் வடமொழி சுலோகம் ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது.

4. சபாநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டு, பாண்டிய புவனேஸ்வரன் சமரகோலாகலன் (கி.பி.1469) ஏகம்பர் காமாட்சியம்மன் ஆலயங்களுக்குப் பாண்டிநாட்டு ஊர்கள் இரண்டு  கொடுத்தான் எனத் தெரிவிக்கிறது. காகதீயகணபதி (கி.பி.1250) காலத்தில் அவர் மந்திரி சாமந்தபோஜன் ஓர் ஊரைத் தானம் செய்தான் மற்றும் விஜயகண்ட கோபாலனது  கல்வெட்டு ஒன்றில் அவன் அரசு பெற்றது கி.பி.1250 எனத் தெரிகிறது.

5. ராயர்மண்டபத்தில் கம்பண உடையார் ஆனந்த ஆண்டுக் கல்வெட்டு இருக்கிறது.

6. காமாட்சி அம்மன் கோயில் அச்சுதராயன் (கி.பி.1534) படையெடுத்து வெற்றியடைந்து கோயிலுக்கு எட்டு ஊர்கள் கொடுத்த செய்தி கண்டிருக்கிறது.

7. கோபுரம்: விஜயநகரமல்லிகார்ச்சுனனுடைய (கி.பி.1456) கல்வெட்டு இருக்கிறது.

பரிநிர்வாண புத்தர் சிலை

இக்கோயிலில் மதிற்சுவரில் புத்தர் பரிநிர்வாண கோலத்தில் உள்ள சிலை இருந்தாக மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார். தற்போது அச்சிலை அங்குக் காணப்படவில்லை. தமிழகத்தில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாம்பரேஸ்வரர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத்தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான  சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால்  இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற  கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி  அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.

வரலாறு

முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால்  புனரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.

இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர்  கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

ஸ்தலவிருட்சம்

ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை  வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. 

வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக்,  யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன.

தலவரலாறு

பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு  வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா  நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.

பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்துச்  செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். 

உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32  அறங்களைச் செய்யப் பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். 

காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.

சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர்  கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்குப் பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.

விழாக்கள்

இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா  பௌர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

கோவில் திறந்திருக்கும் நேரம்

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

ஓம் நமச்சிவாய..

ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆன்மீக பாரதத்தை உருவாக்குவோம்.....!

- கோவை பாலகிருஷ்ணன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com