Enable Javscript for better performance
பெண்கள் வெறுத்து ஒதுக்கும் ஆண் ஜாதக அமைப்பு!!- Dinamani

சுடச்சுட

  
  jathagam

   

  பத்து பொருத்தம், பலவிதமான நேர்காணல், நேரிடை பேச்சு அத்தனையும் செய்து திருமணம் ஆகும். இந்த காலகட்டத்தில் மிக அதிகமான அளவில் பெண்கள், ஆண்களை  வெறுப்பதற்கு பல காரணங்களைச் சொல்லுகின்றனர். அவற்றை, ஜோதிடம் மூலம் முதலிலேயே கண்டு அறிந்து தவிர்ப்பது எப்படி என்பதைத் தான் இந்த கட்டுரையின்  நோக்கம். நன்கு பேசி, பழகி, நகர்வலம் செய்து, ஜாதகப் பொருத்தமே பார்க்காமல் காந்தர்வ (காதல்) திருமணம் செய்துகொள்ளும் பெண்களும், திருமணம் ஆன சில  காலங்களிலேயே வாழ்வு கசந்து போய் திருமணம் செய்துகொண்ட ஆடவனை விட்டு விலகி செல்கின்றனர். ஏன் இவ்வாறு நிகழ்கிறது? 

  பழங்காலத்தில் அதாவது, 40 - 50 வருடங்களுக்கு முன்னால் நடந்த திருமணங்களில் பெரியவர்கள் பார்த்துச் செய்து வைத்த திருமணங்களில் அவ்வாறு நடக்கவில்லை.  காரணம் பெண்கள் வெளியே வரச்செய்தது குறைவாகவே இருந்துள்ளது. ஆனால், இன்று அதிக அளவில் ஏன் ஆண்களை விடப் பெண்கள் வெளியே வந்து பலதரப்பட்ட  வேலைகளில், ஆணுக்கு நிகரான வேலைகளில் ஈடுபடுவதும், ஆணை விட அதிக அளவில் சம்பாதிப்பதும், மேலும் உடன் வேலை செய்யும் அனைத்து ஆண், பெண்களுடன்  பழகுவதாலேயே ஆகும் என்றால் அது தவறாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

  பசி வந்தால் உடனே உணவைத் தேடுகிற நாம், உடலுக்கு, நோய் வந்தால் மருத்துவரை நாடும் நாம், நமது திருமண வாழ்வில் சுகத்தை மட்டுமே எதிர்பார்க்கும் நாம்,  திருமணத்திற்கு முன்னரே சிறந்த ஜோதிடரை அணுகி, பெற்றோரோ அல்லது சம்பந்தப்பட்டோரோ சென்று தனக்கு வரும் கணவன் எப்படி இருப்பார் என விசாரிப்பதில்லை  என்றே கூறமுடியும். வெறுமனே, ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்கவும், வசதி வாய்ப்புகளை மட்டுமே பார்க்கவும் செய்கிற பெற்றோர்கள் / சம்பந்தப்பட்டோர்கள் ஒரு  பெண்ணின் உடல் சார்ந்த நிலைகளையும், ஆணின் உடல் சார்ந்த நிலைகளையும் காணுவதில்லை என்பது வேதனைக்கு உரியதே. செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம்  போன்றவை சிலவற்றை எடுத்துக் கூறினாலும், பிரத்யேகமாக அவற்றைப் பற்றி கேட்கவோ, அதனை ஆய்வு செய்து பார்க்கவோ நேரம் எடுத்துக்கொள்வதில்லை என்பதே  நிதர்சனம். சமுதாய அந்தஸ்துக்கு மட்டுமே கவனம் செலுத்தும் நாம் தனி மனித சுகம், ஆசை, எதிர்பார்ப்பு கண்ணுக்குத் தெரிவதும் இல்லை, தெரிந்து கொள்வதிலும்  ஆர்வம் இல்லை. 

  திருமணத்திற்குப் பின் ஒரு பெண், தனது கணவனை வெறுத்து ஒதுக்கக் கூடிய சில காரணங்கள் 

  1. தன்னைத் தவிர வேறு பெண் / பெண்களிடம் தொடர்பு கொண்ட கணவனை

  2. ஆண்மை குறைவுற்ற கணவனை

  3. குறைவாக சம்பளம் வாங்கக்கூடிய கணவனை

  4. அம்மா பேச்சைக் கேட்டு மட்டுமே நடக்கும் கணவனை

  5. நாத்தனார் பேச்சைக் கேட்டு தம்மைத் தாக்கும் கணவனை

  6. எவ்வளவு கூறியும் தான் விரும்பிய ஆணை விடுத்துப் பெற்றோர் காட்டிய ஆணை மணந்ததால், ஏற்படும் மன நிலையால்

  7. போதை பொருட்களுக்கு ஆளாகும் கணவனை இவை ஒரு சிலவே, இன்னும் பல கரணங்கள் உள்ளது. 

  மேலே கூறியவற்றைத் திருமணத்திற்கு முன்பே ஜோதிட ரீதியாக எவ்வாறு அறியலாம் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

  1. வேறு பெண் / பெண்களிடம் தொடர்புகொண்ட ஆண்களை அறிவது எப்படி?

  லக்கினாதிபதி, புதன், சுக்கிரன் இணைந்து 1, 7, 8 இல் இருப்பது. ராசி அல்லது அம்சத்தில் சுக்கிரன், செவ்வாய் பரிவர்தனைப் பெறுவது. (சுக்கிரன் வீட்டில், செவ்வாயும்,  செவ்வாய் வீட்டில் சுக்கிரனும் மற்றும் செவ்வாய் சுக்கிரன் சாரத்தையும், சுக்கிரன் செவ்வாய் சாரத்தையும் பெற்றிருப்பது) சுக்கிரன் தனித்து செவ்வாய் வீட்டிலும், செவ்வாய்  தனித்து சுக்கிரன் வீட்டிலும் இருப்பது. சககளத்திர யோகம் பெற்றிருப்பவர்களையும் காண முடியும். 

  இவை ஒரு சில ஜோதிட விதிகள், இவற்றிற்கு விதி விலக்குகளும் உள்ளன. இதனைப் படிப்பவர்கள் தாங்களாகவே, தவறான முடிவுக்கு வரவேண்டாம். தங்களின் அருகில்  உள்ள ஜோதிடரை அணுகி அவரின் கருத்துக்களைப் பெறவும். 

  2. ஆண்மை குறைவுற்ற ஆண்களை அறிவது எப்படி? 

  (உடல் உறவு கொள்ள இயலாத நிலை) புதன் 8ஆம் இடத்தில் இருப்பது, அவர் நரம்புக்கு சம்பந்தப்பட்டவர். புதன் பாவிகளுக்கிடையில் இருப்பது. பாதகாதிபதியின் நட்சத்திர  சாரத்தில் இருப்பது. 7ஆம் அதிபதி, சுக்கிரனுடன் இருந்து 6-இல் இருப்பது. அல்லது 8ஆம் பாவத்துடன் சம்பந்தப்படுவது. 8-ஆம் அதிபதி, 8-ஆம் பாவம், பாதிக்கப்படுவது,  உடலுறவு கொள்ளமுடியாத நிலை ஏற்படும். 6ம் வீடு ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால், உடல் ரீதியான பாதிப்புகள் ஜாதகரை படுத்தி எடுக்கும், மேலும் மன ரீதியான  பாதிப்புகளும் ஜாதகரை அதிகம் துன்புறுத்தும். 

  3. குறைவாக சம்பளம் வாங்கக்கூடிய ஆண்களை அறிவது எப்படி?

  ஒருவரின் ஜாதகத்தில், 10-ஆம் வீட்டைக்கண்டும் அந்த வீட்டில் பெற்றிருக்கும் சர்வாஷ்டக பரல்களைக் கொண்டும் அவரின் வேலையைப் பற்றியும், அவர் பெறும் /  பெற்றிருக்கும் சம்பளத்தைப் பற்றியும் கூட காண முடியும். 10-ஆம் இடத்தை விட 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் அதிக பரல்களைப் பெற்றிருப்பாரே ஆனால்,  அவருக்கு பலவழிகளில் பொருள் / பணம் விரயமாகும் என்பதனையும் அறியமுடியும்.

  4. அம்மா பேச்சைக் கேட்டு மட்டுமே நடக்கும் ஆண்களை அறிவது எப்படி?

  சுக்கிரன் நீச நிலை பெற்று அமைவதும் இருதாரப் பலன் அமையும் நிலையைக் கொடுக்கும். சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை  பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்படும். கணவன் மனைவி மனக் கசப்புகள் அமையும். 2இல், 7இல் சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் களத்திரக்காரக  கிரகம் பலவீனம் அடைவதும் இருதார பலன் கொடுக்கும் நிலை உண்டு. சூரியன், 

  செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை உண்டு பண்ணும். இந்தச்  சேர்க்கை பெற்றோர் அதிகமான பெண் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அமைப்புக் கொண்டவர்கள் பெண்களால் பலவித பிரச்னைகளுக்கு ஆளாகின்ற  நிலைகள் அமையும். எனவே மிகவும் நிதானமாக இவர்கள் செயற்பட வேண்டும்.

  சந்திரன் தனது சுய நட்சத்திரங்களான, ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் இருப்பின் அவர்கள் தன் தாயைப் பற்றி அதிகமாகப் பேசவும் அவர்களைப் போற்றவும்  செய்வார்கள். இவர்களிடம் பார்த்து அனுசரித்துச் செல்லுதல் அவசியம். 

  5. தமது சகோதரியின் பேச்சைக் கேட்டு தம்மைத் தாக்கும் ஆண்களை அறிவது எப்படி?

  ஒரு பெண்ணின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 7ஆம் இடம் வரப்போகும் கணவனைப் பற்றிய இடமாகும். அதற்கு. 3ஆம் இடமான 9ஆம் இடம் இளைய சகோதரி (சிறிய  நாத்தனார்) பற்றியும், 7ஆம் இடத்திற்கு, 11ஆம் இடமான 5ஆம் இடம் மூத்த சகோதரிப் பற்றியும் (பெரிய நாத்தனார்) அவர்களின் குண நலன்களைப் பற்றியும் அறிய வாய்ப்பு  உள்ளது.

  6. பெற்றோர் காட்டிய ஆணை மணக்க நிர்ப்பந்திப்பது, காதலை வெளிப்படுத்துவது எப்படி?

  ஒரு பெண் அல்லது ஆணின் ஜாதகத்தில் 2, 5, 7, 11ஆம் பாவங்கள் தொடர்பு பெற்றிருப்பின் நிச்சயம் அவர்கள் காதல் வயப்பெற்றிருப்பார்கள். இதனை ஜாதகத்தில்  கண்டறிந்து அவர்களுக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல் ஆண் / பெண் வீட்டாரின் கடமை ஆகும். ராகு 7ஆம் இடத்தோடு சம்பந்தம் பெறும்போது முஸ்லீம் இன  ஆணுடனோ, கேது சம்பந்தப்பட கிறிஸ்தவ மதம் சார்ந்த ஆணுடனோ தொடர்பு ஏற்படும். மொத்தத்தில் அந்த பெண்ணிற்கு அவர்கள் மத, பழக்க வழக்கத்திற்கு மாறான ஒரு  ஆண் மகனை நேசிப்பாள் என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாததாகும்.

  7. போதைப் பொருட்களுக்கு ஆளாகும் ஆண்களை, அறிவது எப்படி?

  12ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்: போதை பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நிலையை கெடுத்துக்கொள்ளும் தன்மை, மன நோய்க்கு  ஆளாகும் சூழ்நிலை, மற்றவர்களால் ஜாதகரை புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை, ஜாதகர் மற்றவரைப் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை. தீய பழக்க வழக்கங்களை  கற்றுக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாத நிலை, கணவன் மனைவி உறவில் விரிசல், விவாகரத்து, இல்லற வாழ்க்கையில் துன்பம், போன்ற இன்னல்களைச் சந்திக்க  வேண்டிவரும். ஒரு பெண் ஜாதகத்தில் கணவனைப் பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார். இவர் சுக்கிரனின் தொடர்பு பெற்றோ அல்லது சனி, ராகு  தொடர்பு பெற்றோ நீர் ராசியில் இருப்பின் குடிகாரராக இருப்பார். அவரே கேது சம்பந்தப்படும்போது ஏதாவது ஒரு போதை வஸ்துக்கு அடிமை ஆவதை காணமுடிகிறது. 

  8. மனைவியை அடிப்பவர் என முன்கூட்டியே அறிவது எப்படி?

  இப்போது வாழ்க்கையே ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது.  அதனால் நல்ல குணாதிசயங்கள் படைத்தவர்கள் கூட இந்த ஊடகங்களின் நெகடிவ் விஷயங்களை எடுத்துக்கொண்டு கெட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாக  ஆகிவிடுகிறார்களோ என யோசிக்க வைத்து விடுகிறது ! அதிலும் சந்திரன், நீச்சம் மற்றும் வலிமை குன்றி இருப்பின், நிச்சயம் தாயின் பேச்சைக் கேட்டு மனைவியை  அடிக்கும் அளவுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது. மேலே கூறிய அத்தனை செயல்களைச் செய்யும் ஆடவர்களின் ஜாதகத்தில் இயற்கை சுபர்களோ, லக்கின சுபர்களோ பார்வை  பெறும் நிலையில், திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது. அதுவே பாதகாதிபதியின் சாரத்தைப் பெற்றோ தொடர்பு பெற்றோ இருந்தால் திருந்துவது வெகு கடினம். தசை ரீதியாகவும்,  கோள்சாரம் ரீதியாகவும் மாற வாய்ப்பு பெறலாம்.

  போலி சுய ரூபத்தைக் கண்டு ஏமாந்து திருமணத்திற்குப் பின்பு கணவனுடைய உண்மையான சுயரூபம் மனைவிக்குத் தெரிய வந்து அதன் மூலம் நித்தம் நித்தம் கண்ணீர் வடித்துக்  கொண்டு இருக்கும் இளம் பெண்கள் எத்தனையோ பேர். சிலர் கோழைத்தனமாக உயிரை மாய்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். 

  திருமணம் செய்துகொள்ள போகும் ஒரு பெண் தன் வருங்கால கணவன் "அந்நியன்" பட விக்ரமா, "மன்மதலீலை" பட கமலஹாசனா இரு உருவம், இரு குணம்  கொண்டவனா அல்லது உண்மையிலேயே நல்லவனா, நல்ல குணங்கள் கொண்டவனா என்பது பற்றி ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களின் பார்வை, இருப்பிடம், சேர்க்கை  போன்ற நிலையை வைத்து அறிந்துகொள்ளலாம். அப்படிச் செய்யும்போது நல்லதொரு துணையைத் தேர்ந்தெடுத்து நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். 

  கணவன் மனைவியரிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் என்னவென்றால் தாம்பத்திய சுகத்தில் அவர்களில்  ஒருவர் ஏமாற்றப் பட்டிருக்கலாம். யாராவது ஒருவர் அவர்கள் உடல் நிலை அல்லது உடல் அமைப்பு காரணமாக மற்றவருக்குத் தாம்பத்திய சுகம் அளிக்க முடியாத  நிலைமையில் இருக்கலாம். அந்த உண்மையினை திருமணத்தின் போது மறைத்து இருக்கலாம். பெரும்பாலான குடும்பங்களில் இந்த தாம்பத்திய பிரச்னையில் தான்  கணவன் அல்லது மனைவியர் இடையே  குழப்பம் உண்டாகிறது. எந்த ஒரு ஆணும் அல்லது பெண்ணும் தாம்பத்திய சுகத்தில் ஏமாற்றப்படும்போது மிகுந்த வேதனைக்கு  உண்டாவது என்பது சகஜமே.

  இந்த அடிப்படையில் ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ அவருடைய ஜாதகத்தில் அயன சயன போகம் எனும் பாவம் - கிரகங்களின் அமர்வு, பார்வை, சேர்க்கையில்  கணவன் மனைவி இருவரில் ஒருவருக்குக் கெட்டுப் போய் இருந்தால் தாம்பத்திய சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. இதுபோன்ற ஒற்றுமையின்மையை திருமணத்திற்கு  முன்பே சரி செய்ய முடியாதா? நிச்சயம் சரி செய்ய முடியும். ஜாதகங்களின் சாதக பாதகங்களை முன்பே அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்து  மணம் முடித்தால் பிற்காலத்தில் கணவன் மனைவி ஒற்றுமையோடும், மகிழ்வோடும் வாழ்வார்கள். 

  ஆம், இவ்வளவு விஷயங்களையும் நமது முனிவர்களும், முன்னோர்களும் சொல்லிவிட்டுச் சென்றது தான் ஜோதிடம் எனும் விஞ்ஞானமாகும். ஜோதிடம் ஒரு பெரிய கடல்,  அதில் மூழ்கி முத்து எடுப்போரும் உண்டு, தத்தளிப்போரும் உண்டு. ஜோதிடத்தில் சொல்லப்படாத விஷயமே இல்லை எனலாம். எனவே, இப்படிப்பட்ட இந்த அறிவியலைத்  தகுந்த ஜோதிடரின் வாயிலாகத் திருமணத்திற்கு முன்னரே முடிந்தமட்டும் அறிந்து செயல்படுதல் ஒவ்வொரு ஆண் / பெண்ணிற்கும் சிறந்ததாக இருக்கும். "உண்மைக்கு  அவசரம், என்றுமே உண்மையாய் இருக்க முடியாது "என்பதனை அறிந்து செயல்படுத்தல் அவசியமாகிறது. 

  சாயியைப் பணிவோம் எல்லா நலனும் பெறுவோம். 

  - ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்.

  தொடர்புக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai