பதினாறு பேறுகள் பெற்றவன் - ஒரு மாபெரும் வெற்றியாளன்!

நம் இந்து சமய திருமணச்சடங்கில், மூத்த பெரியவர்கள் புதுமணத் தம்பதியரை மற்றும்..
16 பேறுகள்
16 பேறுகள்

நம் இந்து சமய திருமணச்சடங்கில், மூத்த பெரியவர்கள் புதுமணத் தம்பதியரை மற்றும் சுமங்கலிகளை ஆசீர்வாதம் செய்யும் பொழுது ‘ஆல்-போல் தழைத்து அறுகு-போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும்’என்று வாழ்த்துவார்கள் இவற்றில் கூறப்பட்ட "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு" என்பது 16 குழந்தைகளைப் பெற்றெடுக்கவேண்டும் என்பது அர்த்தம் அல்ல. பதினாறு செல்வங்களையே நமக்கு அருளுமாறு நம் முன்னோர்கள் மற்றும் குருமார்கள் ஆசீர்வாதம் செய்கின்றனர். அதேபோல் கடவுளிடம் இந்த 16 செல்வங்களையும் தருவாயாக என்று வேண்டி நிற்கின்றனர். நம் 16 பேறுகள் பற்றித் தெரிந்து ஆசீர்வாதம் செய்வது முக்கியமான ஒன்று.

திருக்கடவூரில் உறைந்திருக்கும் அபிராமி அன்னையின் மீது பாடிய பாடல்களைக் கொண்ட அந்தாதியில் பாடப்பட்ட அபிராமி பட்டர் இவற்றில் பதினாறு வகை செல்வங்களைப் பற்றி பாடப்பட்ட தொகுப்பு ஆகும்.

 கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி 

அருள்வாமி! அபிராமியே!   

- அபிராமி பட்டர்

அபிராம பட்டர் இந்த பதிகத்தில் 16 பேறுகள் வரமாகக் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார். அவைகள் கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வும் - இவை அனைத்து பேறுகள் கிடைக்கப் பெற்றவர்கள் எவராயினும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வது உறுதியானவை. இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு எத்தனை பூர்வ ஜென்ம புண்ணியம் பெற்றிருக்க வேண்டும். அபிராமி அந்தாதி படித்தால் எல்லா வகை செல்வமும் கிட்டும் என்பது நிதசரமான உண்மை.

பதினாறின் பெருமை பற்றி நம் பெரியவா தன் தெய்வத்தின் குரலில் (ஆறாம் பாகம்-2) கூறப்பட்டுள்ளது. பதினாறு செல்வங்கள் கிடைத்துவிட்டால் பூரணமான ஜென்மம் நமக்குப் பூர்த்தியாகும். பதினாறு என்பதற்கு “ஷோடச கலா பூர்ணம்” என்பதாகும். அமாவாசையில் ஆரம்பித்து பூர்ண சந்திரன் அதாவது பௌர்ணமி வரை கணக்கிட்டால் 16 நாட்கள் ஆகும். இதில் உள்ள சூட்சமம் அமாவாசையில் ஒளி இல்லாத சந்திரன் 16 நாட்கள் கடந்தால் பூர்ணமாகப் பௌர்ணமியில் ஜொலிப்பது மிகவும் விசேஷம்.

ஒரு மனிதனுக்கும் ஆகாயத்திற்கும் 16 அருள்கள் தேவைப்படுகிறது. அப்பொழுது தான் சம்பூரணம் பெரும். பதினாறு என்பதற்கு உத்க்ருஷ்டமான அதாவது மிக உயர்வு பொருந்திய எண் ஆகும். பதினாறு கூடினால் ஏழு அவை நம் ஜென்மா, உலகம் மற்றும் சப்த (ஏழு) ஸ்வரங்கள் ஆகும். நம்முடைய சரீரத்தில் அடங்கிய நாசி, கண்டம், சிரசு, தாடை, நாக்கு, பல் ஆகிய உறுப்புக்களின் உதவியால் சப்தம் ஸ்வரங்கள் உண்டாகின்றது. இதுதவிர ஸப்த மாத்ருகா என்று ஏழு தேவிகளைச் சொல்கிற மாதிரி ஷோடச மாத்ருகா என்று பதினாறு தேவதைகள் வணங்குவது மிகச் சிறந்த ஒன்று. ஷோடச உபசாரம் என்கிற பதினாறு விதமாக பூஜை செய்து அம்பாளை மகிழ்விக்கும்பொழுது அனைத்து பதினாறு செல்வங்களையும் நமக்கு தருவாள்.

இதுதவிர புலவர் காளமேகர் தன் பாடல் மூலம் பதினாறு பேறுகள் கேட்டு கடவுளை வேண்டுகிறார். 

துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம் 

அதிதானியஞ் செளபாக்கியம் போக - வறிவழகு 

புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது 

பதினாறுபேறும் தருவாய் மதுரைப் பராபானே.   

(காளமேகர் புலவர்  177) 

மதுரைப் போரூரிலே கோயில் கொண்டிருக்கின்ற பரம்பொருளே துதி புகழ்; வாணி - கல்வி; வீரம் - மனவுறுதி; விசயம் - வெற்றி; சந்தானம் - மக்கட்பேறு; துணிவு - தைரியம்; தனம் - செல்வம்; அதி தானியம் - அதிகமான தானியவளம்; செளபாக்கியம் - சிறந்த இன்பம்; போகம் - நல்ல அனுபோகம்; அறிவு - ஞானம்; அழகு-பொலிவு; புதிதாம் பெருமை-புதுவதாகவந்து நாளுக்கு நாள் சேர்கின்ற சிறப்பு; அறம்- அறஞ்செய்யும் பண்பு; குலம் - நல்ல குடிப்பிறப்பு; நோவகல் பூண்வயது - நோயில்லாமை என்று சொல்லப்படுகின்ற இந்த 16 பேறுகளையும் தந்து எனக்கு அருள் செய்வாயாக என்று வேண்டிக்கொள்கிறார்.

இந்த பதினாறு பேறுகள் பற்றி கடவுளிடம் கேட்டு மன்றாடி வணங்குவோம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள மனிதரின் உண்மையான தேடல் மற்றும் ஜாதகத்தில் உள்ள பரிகாரங்கள் அனைத்தும் தெய்வத்தின் குரலில் உள்ளது.  

குருவே சரணம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com