கும்ப ராசிக்கு இடம் பெயா்ந்தார் குரு பகவான்: ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இன்று இடம் பெயா்ந்துள்ளார்.
குருபகவான் சன்னதியில் மகாதீபாராதனை.
குருபகவான் சன்னதியில் மகாதீபாராதனை.

அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிக்கிழமை  மாலை 6.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழ வளநாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடி என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98 வது தலமாக விளங்குகிறது இத்திருத்தலம். திருவாருர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருபரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி.மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருமைகளையும் கொண்டது.

தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆலங்குடி குருபகவான்.

இருப்பிடம் :- (கிலோ மீட்டர் )திருவாருர் மாவட்டத்தில், வலங்கைமான் வட்டத்தில், நீடாமங்கலம் இரயில் நிலையத்திற்கு வடக்கே 7கிலோமீட்டர் தொலைவிலும். கும்பகோணம் மன்னார்குடி பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. 

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உற்சவ தெட்சிணாமூர்த்தி.

தல வரலாறு :- தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என பெயர் உண்டாயிற்று. அம்மையார் தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்ட சிறப்பை உடையது. அம்மை திருமணம் நடந்த இடத்திற்கு இன்று திருமணமங்கலம் எனப் பெயர் வழங்கப்பெறுகிறது. 

சந்தனக்காப்பு அலங்காரத்தில் கலங்காமற்காத்த விநாயகர்.

மத்தியார்சுனம் ஆகிய திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானுக்கு பரிவாரத்தலமாக விளங்குகிறது. பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதாக சாயரட்சைக்கு உகந்த திருத்தலமாக விளங்குகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சர் சிவ பக்தரான அமுதோகர் என்பவரால் நிர்மானிக்கப்பட்டதாகும் .இத்திருக்கோயில். அமைச்சர் செய்த சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கு தத்தம் செய்து தரும்படி கேட்க, மறுத்த அமைச்சருக்கு சிரச்சேதம் ஏற்பட்டது. இதன் விளைவால் அரசனுக்கு தோஷங்கள் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி செய்ததாக வரலாறு கூறுகிறது.

சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆபத்சகாயேஸ்வரர்.

காலம் :- இத்தலத்து இறைவன்(சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். எனவே இத்திருக்கோயிலின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை. ஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டாகும். எனவே அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாக கருத்தில் கொள்ளலாம். வழிபட்டோர் :- விஸ்வாமித்திரர்,அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும். அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, இலக்குமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்துவழி பட்டத் தலம். முசுகுந்த சக்கரவர்த்தி, சுவாசனன் மற்றும் சுந்தரர் வழிபட்ட தலமாகும்.

சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஏலவார்குழலியம்மன்.

திருஞானசம்பந்தரால் பதிகம் பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்ட கத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடையது. திருஞானசம்பந்தர் தமது பாடல்களால் இத்தலத்தை சிறப்பித்து இரண்டாம் திருமுறையில் பாடியுள்ளார். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

சந்தனக்காப்பு அலங்காரத்தில் வள்ளி,தெய்வானை சமேதசுப்பிரமணியர்.

குருபெயர்ச்சிவிழா- இவ்வாண்டும் அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு 13 ம்தேதி சனிக்கிழமை  மாலை 6.21 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு இக் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு உலக நன்மை வேண்டி விநாயகர் வழிபாட்டுடன், குருபரிகார யாகம் வெள்ளிக்கிழமை  மாலை நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவான சனிக்கிழமை  அதிகாலை 2 வதுகால யாகமும், அதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் , அலங்காரம் செய்யப்பட்டது. 

சந்தனக்காப்பு அலங்காரத்தில் சனீஸ்வரபகவான்.

குருபகவானுக்கு தங்கக்கவச அலங்காரமும், கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூர்த்தி பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6.21 மணிக்கு குருபெயர்ச்சியின் போது மூலவர் குருபகவானுக்கு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் உதவிஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்திருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் செய்திருந்தனர். பெண் போலீசார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறையினர், தீயணைப்புத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட அரசுத்துறையினர் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகளை செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com