தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

பிறந்துள்ள ’குரோதி வருடம்’ ஏற்றம் தருமா என்பதைத் தெரிந்துகொள்வோம்.
தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

2024 தமிழ்ப் புத்தாண்டு(குரோதி வருட) பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசோபக்ருது வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2024 - அன்றைய தினம் சனிக்கிழமையும் - சுக்ல பக்ஷ சஷ்டியும் - ம்ருகசீர்ஷ நக்ஷத்ரமும் - சோபன நாமயோகமும் - பாலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 8.26க்கு (உதயாதி நாழிகை: 35:44)க்கு வ்ருச்சிக லக்னத்தில் ஸ்ரீகுரோதி வருஷம் பிறந்துள்ளது.

கிரக பாதசார விபரங்கள்:

லக்னம் - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்

சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்

சந்திரன் - ம்ருகசீரிஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்

செவ்வாய் - பூரட்டாதி 2ம் பாதம் - குரு சாரம்

புதன்(வ) - உத்திரட்டாதி 3ம் பாதம் - சனி சாரம்

குரு - பரணி 4ம் பாதம் - சுக்கிரன் சாரம்

சுக்ரன் - உத்திரட்டாதி 4ம் பாதம் - சனி சாரம்

சனி - சதயம் 2ம் பாதம் - ராகு சாரம்

ராஹு - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம்

கேது - ஹஸ்தம் 4ம் பாதம் - சந்திரன் சாரம்

செவ்வாய் தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள்

குரோதி வருஷத்தின் நவநாயகர்கள்

ராஜா - செவ்வாய்

மந்திரி - சனி

அர்க்காதிபதி - சனி

மேகாதிபதி - சனி

ஸஸ்யாதிபதி - செவ்வாய்

சேனாதிபதி - சனி

இரஸாதிபதி - குரு

தான்யாதிபதி - சந்திரன்

நீரஸாதிபதி - செவ்வாய்

பசுநாயகர் - கோபாலன்

குரோதி வருஷ வெண்பா:

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்

பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க

அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே

சொற்பவிளையுண்டெனவே சொல்

பாடல் விளக்கம்: குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.

பொது பலன்கள்

இந்த குரோதி ஆண்டை பொருத்தவரை மிதமான மழையும் - மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு 9 புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும்.

இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு, தங்கம் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும்.

ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று வெள்ள பாதிப்பு ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும். இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா, ரஷியா, வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம். இந்த ஆண்டு ராஜாவாக செவ்வாய் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும்.

அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சனி வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும். கார் லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சனி வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.

பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள். மேக அதிபதியாக சனி ஆட்சியாக இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக செவ்வாய் இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கமும் ஏற்படும். அமாவாசை பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.

ராஜா செவ்வாய் பலன்

கல்வி நவீன படுத்தப்படும் சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும் பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்

மந்திரி சனி பலன்

இந்த ஆண்டு மந்திரியாக சனி பகவான் வருவதால் நீர் சம்பந்தப்பட்ட பொருள்கள் பெட்ரோலிய பொருள்கள் பெயிண்ட் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை விலை சற்று உயரும்

ஆண்டின் அதிபதி சனி பலன்

இந்த ஆண்டு அதிபதியாக சனி பகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும் பெண்களுக்கு அதிகமாக மாநிலங்கள் தரப்படும்

மேக அதிபதி சனி பலன்

இந்த ஆண்டு மேக அதிபதியாக சனிபகவான் வருவதால் நெல் கோதுமை தானியங்கள் சோளம் நவ தானியங்கள் நன்கு விளையும்

ஸஸ்யாதிபதி செவ்வாய் பகவான் பலன்

இந்த ஆண்டு ஸஸ்யாதிபதியாக செவ்வாய் பகவான் இருப்பதால் மங்கள காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும்

சேனாதிபதி சனி பலன்

சனி பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும்

ரஸாதிபதி குரு பகவான் பலன்

துவர்ப்பு சுவையுள்ள பொருள்கள் - கசப்புச் சுவையுள்ள பொருள்கள் மருத்துவ குணமுள்ள பொருள்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும்

தான்யாதிபதி சந்திரன் பகவான் பலன்

இந்த ஆண்டு கம்பு கேழ்வரகு சோளம் சிறு தானியங்கள் அதிகமாக விளையும் அதற்கேற்றார் போல் மழையும் இருக்கும்

நீரஸாதிபதி செவ்வாய் பகவான் பலன்

இந்த ஆண்டு மஞ்சள் குங்குமப்பூ வாசனை கஸ்தூரி சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும் விலை சற்று ஏறும்

சித்திரை மாதப் பிறப்பின் பலன்

இந்த ஆண்டு சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை வருவதால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள் பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்.

மகர சங்கராந்தி பலன்

இந்த ஆண்டு செவ்வாய்கிழமை பிறப்பதால் நல்ல மழை பெய்யும் மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com