நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி, லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பு

'கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும், அதையும் காலத்தே செய்யவேண்டும்' நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி மற்றும் லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பினர்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி, லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி, லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பு

'கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும், அதையும் காலத்தே செய்யவேண்டும்' நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி மற்றும் லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பினர்.

புது வில்லன் கரோனா ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையில் மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறான். இவனை புரட்டிப் போடும் ஹீரோ எப்போது வருவான் என்று தொலைக்காட்சிப் பார்த்து - வானொலியில் கேட்டு, கண்ணும் காதும் சோர்ந்திருக்க,  வாயும் - வயிறும் நித்தம் தவறாமல் சந்தையில் மாமூல் வாங்கும் தண்டல்காரன் போல சாப்பாட்டை கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 

பாவம்! ஏழைகள் என்ன செய்வார்கள் என்று அதற்குப்  புரியவில்லையே! அதிலும் நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கை இன்னும் பரிதாபம்! அரிதாரம் வாங்க கையில் காசில்லாமல்  வழியற்று இருக்க, அப்புறம் எங்கே அரங்கேற்றம்! மார்ச் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களே வருமானம் பார்க்கிற தொழில்! அதற்கு அடுத்த ஆறு மாதங்கள் இந்த வருமானத்தை வைத்துதான் வாழ்வை ஓட்ட வேண்டும். கரோனாவால் அவர்களின் வாழ்வு தொடர் எரிமலையாகிப் போனது தான் மிச்சம். குத்தகைக்காரன் 2020-ஆம் வருடத்தை, மொத்தமாக அவர்களின்  சந்தோஷத்தை கனவுக்கு கடன் கொடுத்துவிட்டான்.

அந்த கனவை இழுத்துவந்து நனவாகியிருக்கிறார்கள் ஜெர்மனி மற்றும் லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பினர். ஜெர்மனியின் முன்சென் தமிழ் சங்கம், ஹம்பர்க் தமிழ்ச்சங்கம், ரைன் தமிழ் குழுமம், நுரென்பெர்க் தமிழ் மையம், பெர்லின் தமிழ் சங்கம், பிராங்க்பர்ட் தமிழ் சங்கம், ஸ்டுட்கார்ட் தமிழ் சங்கம் மற்றும் லக்ஸம்பர்க் தமிழ் சங்கம் ஆகியன இணைந்து, மதுரை முத்தமிழ் நாட்டுபுறக்கலைகள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 3924 யூரோ அதாவது  3,37,959 ரூபாயை வழங்கியுள்ளனர். 

அது மட்டுமல்லாமல் அந்த நாட்டுப்புற கலைஞர்களின் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் விதமாக அவர்களின் கலைநிகழ்ச்சியை நேரடித்திருவிழாவாக யூடியூப் சானலில்  நடத்தி அவர்களின் மகிழ்ச்சிக்கு போனஸாக கூடுதல் சந்தோஷம் வழங்கியுள்ளனர்.

முன்சென் தமிழ் சங்க நிர்வாகி செல்வகுமார் பெரியசாமி   அவர்கள் நம்மிடம் பேசும் போது, "மார்ச்  மாத தொடக்கத்திலேயே ஏறத்தாழ 2500 யூரோவை இந்தியாவில் இருக்கும் மக்கள் பாதை அமைப்பு,  கோபிசெட்டிப்பாளைய ரோட்டரி சங்கம் மற்றும் ராஜபாளையத்தைச் சார்ந்த  அறம் அறக்கட்டளை - இவற்றின் மூலம்  முகக்கவசம் மற்றும் ஒரு வார சாப்பாடுக்குத் தேவையான உணவு பொருள்களை  ஏழை எளிய மக்களுக்கு வழங்கி இருந்தோம். 

மதுரை முத்தமிழ் நாட்டுபுறக்கலைகள் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்  ஞானவேல் அவர்கள் ஜெர்மனியில் இருக்கும்  தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்து உடனே 'சரி' என்று அவருக்குள் நம்பிக்கையை  விதைத்தோம். அதற்கேற்றாற்போல், ஜெர்மனியில் வாழும் தமிழர்கள், தங்களால் இயன்ற பண உதவிகள் செய்து நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வில் ஒரு சிறு ஒளியை ஏற்றி வைத்துவிட்டனர். இனி அது அணையாமல் தொடர்ந்து எறியவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அந்த வகையில், இதற்கு உதவிய ஜெர்மனி மற்றும் லக்ஸம்பர்க் நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ஜெர்மனி மற்றும் லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

- ஜேசு ஞானராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com