

பிளேயிங் லெவன்: ரித்திமான் சாஹாவுக்கு அதிக வாய்ப்பு ?
புது தில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் ரிஷப் பன்ட்டைக் காட்டிலும் ரித்திமான் சாஹா சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது பிரதான விவாதமாக இருக்கும் நிலையில், அதில் ரித்திமான் சாஹா அல்லது ரிஷப் பண்ட் இருவரில் யாரை அதில் சேர்ப்பது என்பது தேர்வாளர்களுக்கான முக்கிய விவகாரமாக உள்ளது.
எனினும், விக்கெட் கீப்பராகவும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் சாஹாவின் பங்களிப்பு தற்போதைய நிலையில் தேவையான ஒன்றாக இருப்பதாக அணி நிர்வாகம் கருதுகிறது. ரிஷப் பண்ட்டும், ரித்திமான் சாஹாவும் ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட முறையில் செய்த அவர்களின் பங்களிப்பை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி, உதவி பயிற்சியாளர்கள் விக்ரம் ரத்தோர், பரத் அருண் உள்ளிட்டோர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சாஹா அடித்த 54 ரன்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதிலும் ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சு தாக்குதலை அவர் திறம்பட எதிர்கொண்டார்.
அவருடன் ஒப்பிடுகையில், ஆட்டம் ஓரளவு இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு தான் ரிஷப் பண்ட் களம் புகுந்தார். அவருக்கு முன்னதாக கடுமையான சூழல்களை ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் எதிர்கொண்டு அணியை ஸ்திரப்படுத்தியிருந்தனர். பண்ட் களம் கண்டிருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியினர் தங்களின் பந்துவீச்சில் ஆக்ரோஷத்தை இழந்திருந்தனர்.
சாஹா தனக்கான இடத்தை உறுதி செய்ய விக்கெட் கீப்பிங்கில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிஸ் அதன் கேப்டன் விராட் கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக ஒருநாள், டி20 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறினார்.
கடந்த ஆண்டுகளில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர்களின்போது இரு அணி வீரர்களிடையே காரசாரமான வாக்குவாதங்கள் எழுந்த நிகழ்வுகள் இருக்கும் நிலையில் ஃபிஞ்ச் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2018- 19 காலண்டரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது இந்திய கேப்டன் கோலி - ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இடையே அதுபோன்ற வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஃபிஞ்ச் கூறியதாவது: டெஸ்ட் ஆட்டத்தில் இரு அணிகளில் ஏதேனும் ஒன்றில் வலுவான குணத்துடன் கூடிய வீரர்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு கட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் இரு அணியின் வீரர்களுமே அதை கட்டுப்பாடுடன் கையாள வேண்டும். இந்திய கேப்டன் கோலியிடம் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரை சீண்டினால் எதிரணிக்கு பதிலடி தரக் கூடிய வகையில் அவர் ஆக்ரோஷமடைவார். எனினும், முன்பிருந்ததுடன் ஒப்பிடுகையில் கோலி தற்போது பல நேரங்களில் அமைதியாகவே பிரதிபலிக்கிறார்.
ஆட்டத்தின்போது ஆக்ரோஷமாகும் அவர், களத்துக்கு வெளியே மிக இயல்பாக நடந்துகொள்கிறார். ஐபிஎல் போட்டியில் அவரது தயார்நிலை அருமையானதாக இருந்தது.
எந்த நிலையிலும் தனது அணியை விட அதிகமாக எதிரணி குறித்து கவனம் செலுத்த மாட்டார் என்று ஃபிஞ்ச் கூறினார்.
கேப்டன்ஸியில் ரஹானே அழுத்தமாக உணர மாட்டார்
புது தில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி 3 ஆட்டங்களின்போது கேப்டன் பொறுப்பேற்றாலும் அது தனக்கு அழுத்தம் தருவதாக அஜிங்க்ய ரஹானே உணர மாட்டார் என்று சுனில் காவஸ்கர் கூறினார்.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு கோலி விடுப்பில் நாடு திரும்புகிறார். அந்த நிலையில் எஞ்சிய 3 ஆட்டங்களில் அஜிங்க்ய ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சுனில் காவஸ்கர் கூறியதாவது: டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டால், அதை அவர் அழுத்தமாக உணர மாட்டார். ஏனெனில் இதற்கு முன் தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், பெங்களூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கு அவர் வெற்றி தேடித் தந்துள்ளார்.
தற்போது கோலி இல்லாத 3 டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ரஹானேவுக்கு அந்தப் பொறுப்பு அழுத்தம் தருவதாக இருக்காது. அந்த ஆட்டங்களுக்கு மட்டும் தான் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக உணர்ந்து விளையாடுவார்.
ஒரு பேட்ஸ்மேனாக எவ்வாறு சிறப்பாக விளையாடுகிறாரோ, அதேபோல் கேப்பிட்டன்ஸியையும் அவர் சிறப்பாகச் செய்வார். அதேபோல், எதிர்வரும் டெஸ்ட் தொடரில் சேதேஷ்வர் புஜாராவும் நல்ல முறையில் விளையாடுவார் என்றார் காவஸ்கர்.
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரு பயிற்சி ஆட்டங்களில் இந்திய ஏ மற்றும் இந்திய அணிக்கு அஜிங்க்ய ரஹானே கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஆல்- ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கால் சதைப் பகுதியில் வலியுடன் இருக்கும் சீன் அப்பாட் அந்த ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் தொடக்கத்திலிருந்தே ஆஸ்திரேலிய அணியினர் அடுத்தடுத்து காயமடைந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கடைசியாக தற்போது சீன் அப்பாட் காலின் சதைப் பகுதி வலி காரணமாக முதல் ஆட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், மெல்போர்னில் வரும் 26- ஆம் தேதி நடைபெறும் 2- ஆவது டெஸ்டில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்டில் அவருக்குப் பதிலாக ஹென்ரிக்ஸ் இணைந்துள்ளார். முன்னதாக தொடையில் லேசான காயம் காரணமாக 2- ஆவது பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் ஹென்ரிக்ஸ் தேர்ச்சி அடைந்ததை அடுத்து முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கான ஆஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
ஹென்ரிக்ஸ் கடைசியாக சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒருநாள் தொடரின்போது காயமடைந்தார். அதேபோல், இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வில் புக்கோவ்ஸ்கி இடுப்புப் பகுதியில் காயம் கண்டார். பயிற்சி ஆட்டத்தின்போது கேமரூன் கிரீன், ஹேரி கான்வே, ஜாக்சன் பேர்டும், அத்துடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.