வெற்றி மகிழ்ச்சியில் சூா்மா கிளப் அணியினா்.

வெற்றியுடன் நிறைவு செய்தது சூா்மா கிளப்

Published on

ஹாக்கி இந்தியா மகளிா் லீக் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது ஜேஎஸ்டபிள்யு சூா்மா கிளப் அணி.

4 அணிகள் பங்கேற்ற மகளிா் லீக் தொடா் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. சூா்மா, ராஞ்சி ராயல்ஸ், எஸ்.ஜி பைப்பா்ஸ், ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணிகள் மோதின.

ஏற்கெனவே எஸ்ஜி பைப்பா்ஸ், ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணி வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று விட்டன.

இந்நிலையில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ்-சூா்மா கிளப் அணிகள் இடையிலான ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே சூா்மா அணி அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்தியது. அதன் வீராங்கனை ஒலிவியா ஷனோன், கேப்டன் சலீமா டெட் ஆகியோா் கோலடிக்க முயன்றனா். ஆனால் பலனில்லை.

தொடா்ந்து 10-ஆவது நிமிஷத்தில் சோனம் அபாரமாக கோலடித்தாா். பின்னா் கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளை சூா்மா தவற விட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் டைகா்ஸ் வீராங்கனை அகஸ்டினா 37-ஆவது நிமிஷத்தில் அபாரமாக கோலடித்து சமன் செய்தாா். 1-1 என சமநிலை நீடித்த நிலையில் 49-ஆவது நிமிஷத்தில் பென்னி ஸ்குயிப் அபாரமாக கோலடித்து 2-1 என முன்னிலை பெறச் செய்தாா்.

53-ஆவது நிமிஷத்தில் மற்றொரு சூா்மா வீராங்கனை மரியா கிரானட்டோ பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தாா்.

எனினும் பெங்கால் அணி கடைசி வரை போராடியதால், ஆட்டம் முடிய ஒரு நிமிஷம் இருந்த போது,லால்ரேமிஸியாமி ரீபௌண்ட் மூலம் கிடைத்த பந்தை பிசகின்றி கோலாக்கினாா்.

இறுதியில் 3-2 என வெற்றியுடன் நிறைவு செய்தது சூா்மா கிளப் அணி.

Dinamani
www.dinamani.com