முச்சதம் விளாசி வரலாறு படைத்த வியான் முல்டர்!

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி வரலாறு படைத்துள்ளார்.
wiaan mulder
வியான் முல்டர்படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி வரலாறு படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஜூலை 6) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்க அணியில் அந்த அணியின் கேப்டன் வியான் முல்டர் முச்சதம் விளாசி அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 334 பந்துகளில் 367* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 49 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேவிட் பெடிங்ஹம் 82 ரன்களும், லுஹான் டி பிரிட்டோரியஸ் 78 ரன்களும் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் 367* ரன்கள் குவித்தன் மூலம், தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் தனிநபராக அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பாக, ஹாசிம் ஆம்லா டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் 311* ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றில் 350 ரன்களுக்கும் அதிகமாக குவித்த 7-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் தனிநபராக அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பாக, கடந்த 1958 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் பாகிஸ்தான் வீரர் ஹனிஃப் முகமது 337 ரன்கள் எடுத்திருந்ததே டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் ஒன்றில் தனிநபர் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 2003 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் 362 ரன்கள் எடுத்திருந்ததே இதுவரையிலான அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

South African captain Wiaan Mulder has created history by scoring a triple century.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com