சிங்கத்தின் குகைக்குள் செல்லும் ஷுப்மன் கில்; தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
shubman gill
ஷுப்மன் கில் (கோப்புப் படம்)
Published on
Updated on
2 min read

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.

சிங்கத்தின் குகைக்குள் ஷுப்மன் கில்

இன்னும் இரண்டு நாள்களில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தினேஷ் கார்த்திக் (கோப்புப் படம்)
தினேஷ் கார்த்திக் (கோப்புப் படம்)

இது தொடர்பாக தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லுக்கு முதலில் நான் கூற விரும்புவது என்னவென்றால், ஃபீல்டிங்கின்போது மட்டுமே அவர் கேப்டனாக செயல்பட வேண்டும். அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். டிரெஸ்ஸிங் ரூமில் அவருக்கு மரியாதை கிடைக்க வேண்டுமென்றால், அவர் நன்றாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவது எவ்வளவு கடினமானது என்பதை ஷுப்மன் கில் தற்போது உணர்ந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அவர் சிங்கத்தின் குகைக்குள் சென்று கொண்டிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிது கிடையாது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சற்று வலுவாக இல்லாதது இந்திய அணிக்கான ஒரே ஒரு சாதகமான விஷயமாக உள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் இந்திய அணியை அழுத்தத்தில் வைத்திருக்கும் என்றார்.

25 வயதாகும் ஷுப்மன் கில் இதுவரை இந்திய அணிக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடியுள்ள போதிலும், வெளிநாடுகளில் அவருக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை பெரிய ரன்களாக அவரால் மாற்ற முடியவில்லை. அதிலும் குறிப்பாக, சேனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்ததில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் வென்றதே கிடையாது. இந்த வரலாற்றை ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com