

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி மிகவும் வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், ஆனால் போட்டியின் டெத் ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு யோசிக்கக் கூடியதாக இருப்பதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டிகளில் இந்தியா தற்போது அசைக்க முடியாத மிகவும் வலுவான அணியாக உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள 36 டி20 போட்டிகளில் 29-ல் வெற்றி பெற்றுள்ளது. இது மிகப் பெரிய சாதனை. டி20 வடிவிலான போட்டிகளை கணிப்பது மிகவும் கடினம். எல்லாப் போட்டிகளும் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால், தற்போதுள்ள இந்திய அணி வலுவாக இருக்கிறது.
பந்துவீச்சைப் பொருத்தவரை, இந்திய அணியின் டெத் ஓவர்கள் எப்படி இருக்கும், யார் பந்துவீசுவார்கள் என்பது சிறிது கவலையளிக்கும் விஷயமாக இருக்கும். ஏனெனில், சுழற்பந்துவீச்சாளர்கள் அதிகம் அடங்கிய பிளேயிங் லெவனுடனேயே இந்திய அணி களமிறங்குகிறது. வேகப் பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் பிரதான பந்துவீச்சாளர்களாகவும், ஷிவம் துபே மூன்றாவது பந்துவீச்சு தெரிவாகவும் உள்ளார்.
இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஆதரவு அளிக்கிறது. ஆனால், சில நேரங்களில் குறைந்த ரன்கள் குவித்திருக்கையில், ஆட்டத்தின் பிற்பகுதியில் ரன்கள் விடாமல் ஓவர்கள் வீச வேண்டும். அந்த இடத்தில்தான் இந்திய அணிக்கான சவால் காத்திருக்கிறது என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல் (துணைக் கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.