
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
டெம்பா பவுமா விலகல்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் டெம்பா பவுமா ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகுகிறார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய ஸ்கேன் செய்யப்படவுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேசவ் மகாராஜ் அணியை கேப்டனாக வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அனுபவமற்ற இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறும்: முன்னாள் வீரர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.