
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் நாளை (மார்ச் 9) நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எச்சரிக்கும் ரவி சாஸ்திரி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் ரவி சாஸ்திரி பேசியதாவது: இந்திய அணியை ஒரு அணியால் வீழ்த்த முடியுமென்றால், அது நியூசிலாந்து அணியால் மட்டுமே முடியும். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கவனமாக விளையாட வேண்டும்.
இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது ஆல்ரவுண்டருக்கு கிடைக்கும் எனக் கூறுவேன். இந்திய அணியிலிருந்து அக்ஷர் படேல் அல்லது ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கிளன் பிலிப்ஸ் அருமையாக ஃபீல்டிங் செய்கிறார். அவர் 40 அல்லது 50 ரன்கள் மற்றும் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தவும் வாய்ப்பிருக்கிறது.
இதையும் படிக்க: ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறந்துவிட்டது: மொயின் அலி
விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற வீரர்கள் இருக்கும் ஃபார்மில் அவர்களை நீங்கள் 10 ரன்களுக்கும் மேல் எடுக்கவிட்டால், அது எதிரணிக்கு ஆபத்தாக அமையலாம். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சனுடன் ரச்சின் ரவீந்திராவும் இருக்கிறார். அவர் மிகவும் திறமை வாய்ந்த இளம் வீரர். கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திராவை நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவிட்டால், அவர்கள் எதிரணிக்கு ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்றார்.
இதுவரை 4 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ள நியூசிலாந்து அணி மூன்று முறை இந்திய அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.