
வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். 35 பந்துகளில் சதம் விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிவேக சதம் விளாசிய அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
14 வயதில் சதம் விளாசி அசத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக மாறக்கூடிய சிறப்பான வாய்ப்பு அவருக்கு இருப்பதாகக் கூறினர். சச்சின் டெண்டுல்கர் போன்று உருவெடுப்பதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்
வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சூர்யவன்ஷியோ அல்லது வேறு எந்த ஒரு இளம் வீரரையோ சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது. சச்சின் டெண்டுல்கர் போன்ற திறமையான வீரர்கள் அடிக்கடி உருவாவதில்லை. 16 வயதில் பெர்த் போன்ற மிகவும் கடினமான ஆடுகளத்தில் சதமடிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. உலகின் பல்வேறு வீரர்களும் ரன்கள் குவிக்கத் தடுமாறும் பெர்த் ஆடுகளத்தில் சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் சதம் விளாசி அசத்தினார். ஆனால், ஐபிஎல் தொடரில் 14 வயது இளம் வீரர் (வைபவ் சூர்யவன்ஷி) சதம் விளாசுவார் என்பதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நினைத்தாலும் அவரது ஆட்டம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது என்றார்.
கடந்த 1991-92 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 114 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.