12 ஆட்டங்களில் 4 ஆட்ட நாயகன் விருதுகள்: அசத்தும் சிஎஸ்கே ருதுராஜ்

2019 ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
12 ஆட்டங்களில் 4 ஆட்ட நாயகன் விருதுகள்: அசத்தும் சிஎஸ்கே ருதுராஜ்

2016-ல் ஜார்க்கண்ட் அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமான ருதுராஜை 2019 ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. எனினும் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடினார். தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்தார். இந்திய அணியில் இடம்பெறாத எந்தவொரு வீரரும் அதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களை எடுத்ததில்லை. ஆறு ஆட்டங்களில் 204 ரன்களுக்கு எடுத்து நம்பிக்கை ஏற்படுத்தினார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் சிறு சறுக்கலுக்குப் பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார் ருதுராஜ். முதல் மூன்று ஆட்டங்களில் 5,5,10 என்றுதான் குறைவாக ரன்கள் எடுத்தார். எனினும் அவர்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தது சிஎஸ்கே. இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த மூன்று ஆட்டங்களில் 64, 33, 75 என சிறப்பாக விளையாடி சென்னை அணியின் வெற்றிகளுக்கு அதிகமாகப் பங்களித்துள்ளார். தொடக்க வீரர்களான ருதுராஜும் டு பிளெஸ்சிஸும் அதிக ரன்கள் குவித்து வருவதால் சிஎஸ்கே அணியால் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற முடிந்துள்ளது.

சிஎஸ்கேவுக்காக விளையாடிய 12 ஆட்டங்களிலேயே 4 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார் 24 வயது ருதுராஜ். 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக அதிகமுறை ஆட்ட நாயகன் விருது வாங்கிய வீரர்களில் ருதுராஜும் ஒருவர்.

2018 முதல் அதிகமுறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற சிஎஸ்கே வீரர்கள் 

ஷேன் வாட்சன் - 6 (43 ஆட்டங்கள்)
தோனி - 4 (51 ஆட்டங்கள்)  
ருதுராஜ் - 4 (12 ஆட்டங்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com