மெக்கல்லம் பாய்ச்சிய ஒளி: 7-ம் இடத்திலிருந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கியபோது இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மெக்கல்லம் பாய்ச்சிய ஒளி: 7-ம் இடத்திலிருந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய கேகேஆர் அணி


புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்து தடுமாறிக் கொண்டிருந்த கேகேஆர் அணி, ஐபிஎல் இறுதிச்சுற்றில் இன்று விளையாடுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கியபோது இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சிஎஸ்கேவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. 2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

ஐபிஎல் 2021 போட்டி முதலில் இந்தியாவில் நடைபெற்றபோது முதல் 7 ஆட்டங்களில் 2-ல்தான் கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற மீதமுள்ள 7 ஆட்டங்களில் குறைந்தது 5 வெற்றிகளையாவது பெறவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி மாறியபிறகு புதிய முகத்தைக் காட்டியது. அணி வீரர்களைப் புதிய பாதையில் பயணிக்க வைத்தார் மெக்கல்லம்.

முதல் இரு ஆட்டங்களில் மும்பை, ஆர்சிபி அணிகளைத் தோற்கடித்து உற்சாகம் பெற்றது. சிஎஸ்கேவுடனான அடுத்த ஆட்டத்தில் கடைசிப் பந்தில் தோல்வியைப் பெற்றது. பிறகு தில்லியை வென்று அசத்தியது. இப்படி பெரிய அணிகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்ற கேகேஆர் அணி, மிகவும் சுமாராக விளையாடி வந்த பஞ்சாப்பிடம் திடீரென தோற்றுப்போனது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் கடுப்பானார்கள். ஆனால் சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான கடைசி இரு ஆட்டங்களையும் வென்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது கொல்கத்தா.

பிளேஆஃப் சுற்றில் இரு வெற்றிகள் பெற்றால் தான் இறுதிச்சுற்று வாய்ப்பு என்கிற கடினமான நிலையிலும் அந்தத் தடைகளைத் தாண்டி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கேகேஆர் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான மெக்கல்லமைத்தான் எல்லோரும் கைகாட்டுகிறார்கள். அவருடைய திட்டமிடல்கள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் போன்றவைதான் கேகேஆர் அணியின் விதியை மாற்றியதாகப் பரவசமாகிறார்கள். இளம் வீரரான வெங்கடேஷ் ஐயரின் புதுவரவு அணிக்குப் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. கடைசியாக விளையாடிய சில ஆட்டங்களில் ரஸ்ஸல் இல்லாவிட்டாலும் ஷகிப் அல் ஹசன் அணிக்குத் தேவையான பக்கபலமாக உள்ளார். வருண் சக்ரவர்த்தி, நரைன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சு எல்லா பேட்டர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் அணியில் ஏற்பட்ட மாறுதல்கள் சரியாக அமைந்ததும் இவ்வளவு தூரம் முன்னேறியதற்குக் காரணம். மார்கன், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் சரியாக விளையாடாமல் போனாலும் அணியை இதுவரைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. 

இப்போது எல்லோரும் மகிழ்சியாக இருக்கிறோம். அதற்குக் காரணம் மெக்கல்லம் தான் என்கிறார் கேகேஆர் அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸ்ஸி. இன்னும் ஒரு சவால் காத்திருகிறது. மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பது கேகேஆர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com