சஹால்: ஆர்சிபி தவறவிட்ட பொக்கிஷம்

புதிய அணியில், புதிய சூழலில் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம். 
சஹால்: ஆர்சிபி தவறவிட்ட பொக்கிஷம்

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து நீக்கம்
ஆர்சிபி அணி தக்கவைக்கவில்லை, ஏலத்திலும் தேர்வு செய்யவில்லை.

இந்த இரண்டுமே சஹாலுக்கு எந்தளவு வேதனையை ஏற்படுத்தியிருக்கும்! 

ஐபிஎல் 2022 போட்டியில் 30 ஆட்டங்கள் முடிந்த பிறகு சஹால் தான் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக உள்ளார். 6 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகள். எகானமி - 7.33.  அடுத்த இடத்தில் உள்ள நடராஜன், 5 விக்கெட்டுகள் குறைவாக எடுத்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று ஹாட்ரிக் எடுத்தார் சஹால். ஏற்கெனவே ஹாட்ரிக் எடுத்திருக்க வேண்டியது. கருண் நாயர் கேட்சைத் தவறவிட்டதால் அந்த வாய்ப்பு பறிபோனது. நேற்று சஞ்சு சாம்சன் அற்புதமாக கேட்ச் பிடித்து சஹால் ஹாட்ரிக் எடுக்க உதவினார். சாதித்த பிறகு மைதானத்தில் ஒய்யாரமாக எப்படி ஒரு போஸ் கொடுத்தார்!

சஹால் என்றாலே ஆர்சிபி அணி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த ஏலத்தில் சஹாலைத் தேர்வு செய்ய ஆர்சிபி விரும்பவேயில்லை. மும்பைதான் கடைசி வரைக்கும் போராடி ராஜஸ்தானிடம் தோற்றது.

2011 ஏலத்தில் சஹாலைத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் இரு வருடங்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2013-ல் ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனான பிறகு ஒரு ஆட்டத்தில் சஹால் விளையாட வாய்ப்பு வழங்கினார். 

2014-ல் ஆர்சிபி அணிக்கு ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வானார் சஹால். 4 வருடங்களுக்கு அதே சம்பளம் தான். 2018 ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்ட் முறையைப் பயன்படுத்தி ரூ. 6 கோடிக்கு சஹாலைத் தேர்வு செய்தது ஆர்சிபி. 2014 முதல் ஆர்சிபி அணிக்காக ஒவ்வொரு வருடமும் குறைந்தது 13 ஆட்டங்களாவது விளையாடி விடுவார். 2015-ல் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகளை எடுத்தார். 

ஆர்சிபி அணிக்காக 8 வருடங்களில் 113 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் சஹால். ஆனால் இந்த வருடம் ராஜஸ்தான் அணி வீரர். 6.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. புதிய அணியில், புதிய சூழலில் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம். 

இதுவரை அதிக விக்கெட்டுகள் எடுத்ததோடு ஹாட்ரிக், 5 விக்கெட்டுகள் எனத் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் குறுகிய காலத்தில் நிகழ்த்தி விட்டார். இனியும் சஹாலை யாராலும் புறந்தள்ள முடியாது. அப்படிச் செய்தால் அதற்கான விளைவுகள் பயங்கரமாக இருக்கும். 

மேலும் எதிரணி இன்னிங்ஸின் கடைசி ஓவர்களில் சஹால் பந்துவீசுவது ராஜஸ்தானுக்கு இன்னும் பெரிய பலமாக உள்ளது. தன்னம்பிக்கையும் திறமையும் இல்லாமல் ஒரு சுழற்பந்துவீச்சாளரால் இந்தச் சூழலில் சாதிக்க முடியுமா?

சஹால் எடுத்த 17 விக்கெட்டுகளில் 11 விக்கெட்டுகள் கடைசி 6 ஓவர்களில் கிடைத்தவை. எகானமி - 6.29.

சுநீல் நரைன் மட்டுமே கடைசி ஓவர்களில் பந்துவீசி எதிரணிக்குக் கலக்கத்தை ஏற்படுத்துவார். இப்போது பேட்டர்களுக்குப் புதிய அச்சுறுத்தலாக உள்ளார் சஹால். ஆர்சிபி அணிக்காகக் கடந்த வருடம் விளையாடியபோதும் கடைசி 6 ஓவர்களில் 5.7 எகானமியோடு 7 விக்கெடுட்டுகளை எடுத்தார். இந்தமுறை விஸ்வரூபம். 

நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 40 ரன்கள் என்கிற ஓரளவு எளிதான சவால் தான் கொல்கத்தாவுக்கு இருந்தது. கைவசம் 6 விக்கெட்டுகள். ஷ்ரேயஸ் ஐயர் 85 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். சஹால் ஓவரில் அதிரடியாக விளையாட முயலாமல் இருந்திருந்தாலே கொல்கத்தாவுக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அந்த ஓவரில் அலட்சியமாக விளையாடியதால் சஹால் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை எடுத்தார். கதை முடிந்தது.

ஆட்டம் முடிந்தபிறகு பலரும் எழுப்பிய கேள்வி.

இப்படி ஒரு வீரரை ஆர்சிபி ஏன் தக்கவைக்கவில்லை? ஏலத்தில் எடுக்கக்கூட முயலவில்லையே! பொக்கிஷத்தை வெளியேற்றலாமா?

இப்படி ஒரு வீரரை டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யாமல் இருந்தது ஏன்?

சஹால் விஷயத்தில் இனியொரு முறை யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்கிற பாடம் பலருக்கும் கிடைத்திருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com