ஐபிஎல் போட்டியில் முதல் வாய்ப்பை வீணடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித்

27 வயது இந்திரஜித்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
ஐபிஎல் போட்டியில் முதல் வாய்ப்பை வீணடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித்

ரஞ்சி கோப்பைப் போட்டியில் தமிழக அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனாலும் தமிழக வீரர் பாபா இந்திரஜித் அபாரமாக விளையாடினார். விளையாடிய 3 ஆட்டங்களிலும் சதங்கள் அடித்தார். கூடுதலாக ஒரு அரை சதமும். 3 ஆட்டங்களில் 396 ரன்கள் எடுத்தார். சராசரி - 99.00.

27 வயது இந்திரஜித்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அறிமுகமானார் இந்திரஜித். 

4.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் என கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது களமிறங்கினார் இந்திரஜித். முதல் 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த இந்திரஜித் திடீரென குல்தீப் யாதப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று லாங் ஆன் பகுதியில் பவலிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் தனக்கு அளிக்கப்பட்ட அறிமுக வாய்ப்பை வீணடித்தார்.

தனது அணி ரன்கள் எடுக்கத் தடுமாறிக்கொண்டிருக்கும்போது நிதானமாக விளையாடி 20 ரன்கள் சேர்த்த பிறகு அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கலாம். ஐபிஎல் போட்டியில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் அவருடைய சகோதரர் பாபா அபரஜித் எப்படியெல்லாம் அவதிப்பட்டார் என்பதை இந்திரஜித் நன்கு அறிவார். குஜராத் அணியில் உள்ள 20 வயது தமிழக வீரர் சாய் சுதர்சன் 35, 11 என ஓரளவு நன்கு விளையாடியும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இந்த வருடம் 7 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியும் ஷாருக் கானுக்கும் கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணி வாய்ப்பளிக்கவில்லை. 

இப்படி ஐபிஎல் போட்டியில் இளம் தமிழக பேட்டர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில் கொல்கத்தா அணி வழங்கிய முதல் வாய்ப்பை வீணடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார் இந்திரஜித். கேகேஆர் அணி புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் உள்ளது. இன்னொரு முறை இந்திரஜித்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை அவர் வீணடிக்கக் கூடாது. முத்திரை பதிக்காமல் களத்தை விட்டு வெளியேறக் கூடாது என்கிற லட்சியத்துடன் அவர் விளையாட வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com