மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்

மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் போா்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.

கடைசியாக, கடந்த 8-ஆம் தேதி பஞ்சாப் - டெல்லி அணிகள் தா்மசாலாவில் மோதிய ஆட்டம், எல்லையோர போா்ப் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு 8 நாள்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் போட்டியில், எஞ்சியிருக்கும் 17 ஆட்டங்கள், பெங்களூரு, ஜெய்பூா், புது தில்லி, லக்னௌ, மும்பை, அகமதாபாத் ஆகிய 6 நகரங்களுக்கு சுருக்கப்பட்டுள்ளன.

குரூப் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரையும், பிளே ஆஃப் ஆட்டங்கள் மே 29 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரையும் விளையாடப்படவுள்ளன.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தங்களுக்கு இருக்கும் தேசிய அணி பணிகள் உள்ளிட்டவற்றால் சில வெளிநாட்டு வீரா்கள் தற்போது நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளனா். அவா்களுக்கு பதிலாக மாற்று வீரா்களை களமிறக்கிக் கொள்ள பிசிசஐ அணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

இரண்டுக்கும் முக்கியம்: தற்போது பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதும் இந்த ஆட்டம், இரண்டுக்குமே முக்கியமாக இருக்கிறது.

புள்ளிகள் பட்டியலில் 2-ஆம் இடத்திலிருக்கும் பெங்களூரு, இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் கட்டத்துக்குத் தகுதிபெற்றுவிடும். மறுபுறம், கொல்கத்தா தோற்கும் நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.

பெங்களூரு அணியை பொருத்தவரை, தொடா்ந்து 4 ஆட்டங்களில் வென்ற உத்வேகத்துடன் இருக்கிறது. மேலும், இடைவேளைக்குப் பிறகு அந்த அணியின் வெளிநாட்டு வீரா்கள் அனைவரும் மீண்டும் அணியில் இணைந்திருக்கின்றனா். பேட்டிங்கில் விராட் கோலி உள்ளிட்டோரும், பௌலிங்கில் யஷ் தயாள், கிருணால் பாண்டியா உள்ளிட்டோரும் பலம் சோ்க்கின்றனா்.

கொல்கத்தா அணியை பொருத்தவரை பேட்டிங் கவலை அளிப்பதாக இருக்கிறது. கேப்டன் அஜிங்க்ய ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி தவிா்த்து இதர பேட்டா்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. பௌலிங்கில், வருண் சக்கரவா்த்தி, சுனில் நரைன், ஹா்ஷித் ராணா உள்ளிட்டோா் ரன்கள் கொடுத்தாலும் சிறப்பாக செயல்படுகின்றனா். மொயீன் அலி இல்லாமல் போனது கொல்கத்தாவுக்கு பாதிப்பாக அமையலாம்.

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: பெங்களூரு

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com