ஒரேநாளில் 2-வது சூப்பர் ஓவர்: சமனில் முடிந்த மும்பை - பஞ்சாப் ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
ஒரேநாளில் 2-வது சூப்பர் ஓவர்: சமனில் முடிந்த மும்பை - பஞ்சாப் ஆட்டம்


மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் முதல் 2 ஓவர்கள் அடக்கி வாசித்தனர். போல்ட் வீசிய 3-வது ஓவரில் ராகுல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடிக்க 20 ரன்கள் கிடைத்தன. ஆனால், அடுத்த ஓவரில் பூம்ரா வேகத்தில் அகர்வால் (11 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெயில் அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, ராகுல் தனது அதிரடி மூலம் ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய தருணத்தில் கெயில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரன் சிக்ஸரும் பவுண்டரியுமாக அடித்து மிரட்ட ரன் ரேட் மளமளவென உயர்ந்தது.

இந்த நிலையில், 1 ஓவர் மட்டுமே வீசியிருந்த பூம்ராவை மீண்டும் பந்துவீச அழைத்தார் ரோஹித். இதற்குப் பலனாக பூரன் விக்கெட்டை வீழ்த்தினார் பூம்ரா. பூரன் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனிடையே அரைசதத்தைக் கடந்த ராகுலுக்கு, மேக்ஸ்வெல் விக்கெட்டால் நெருக்கடி அதிகரித்தது. எனினும், அவர் துரிதமாக ரன் சேர்த்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை 10-க்குக் கீழ் கடைப்பிடித்து வந்தார்.

கடைசி 3 ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ராகுல் கொண்டு வந்தார். 18-வது ஓவரை பூம்ரா வீச முக்கியமான ஓவராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், சிறப்பான யார்க்கர் பந்தால் ராகுலை போல்டாக்கினார் பூம்ரா. ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். இதனால், அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

19-வது ஓவரை கூல்டர் நைல் வீசினார். அந்த ஓவரில் 2-வது பந்தை தீபக் ஹூடாவும், 4-வது பந்தை கிறிஸ் ஜோர்டனும் பவுண்டரிக்கு விரட்ட அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. இதனால், கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

கடைசி ஓவரை போல்ட் வீசினார். முதல் பந்தில் 1 ரன் கிடைக்க, 2-வது பந்தில் பவுண்டரி கிடைத்தது. இதனால், 4 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 3-வது பந்தில் 1 ரன் கிடைக்க, 4-வது பந்தில் ரன் ஏதும் இல்லை. 5-வது பந்தில் மீண்டும் 1 ரன் கிடைக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டன. அதில் 1 ரன் மட்டுமே எடுக்க, 2-வது ரன் எடுக்கும் போது ஜோர்டன் ரன் அவுட் ஆனார். இதனால், இந்த ஆட்டமும் சமனில் முடிந்தது. இதன்மூலம், சூப்பர் ஓவரில் முடிவு தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்று நடைபெற்ற முதல் ஆட்டமும் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com