விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிலிச்சை சாய்த்தார் கோவாலிக்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரான குரோஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

News image

காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் கோவாலிக்.

Updated On :4 ஜனவரி 2017, 7:09 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரான குரோஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
ஸ்லோவேகியாவைச் சேர்ந்த தகுதிச்சுற்று வீரரான ஜோசப் கோவாலிக் 7-6 (5), 5-7, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச்சை சாய்த்தார். போட்டித் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த சிலிச், தனது முதல் ஆட்டத்திலேயே தோற்றதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-ஆவது நாளான புதன்கிழமை பிரதான கோர்ட்டில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மரின் சிலிச்சும், சர்வதேச தரவரிசையில் 117-ஆவது இடத்தில் இருக்கும் ஜோசப் கோவாலிக்கும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய கோவாலிக், முதல் செட்டின் 2-ஆவது கேமிலேயே சிலிச்சுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் சிலிச் தனது முதல் சர்வீஸை காப்பாற்ற போராடிய வேண்டியிருந்தது. 5 முறை டியூஸ் வரை சென்ற அந்த கேமை இறுதியில் 3 ஏஸ் சர்வீஸ்களை விளாசி மீட்டார் சிலிச்.
சராசரியாக 200 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்த சிலிச், 7-ஆவது கேமில் கோவாலிக் சர்வீஸை முறியடிக்க முயன்றார். ஆனால் அது கடைசியில் தோல்வியில் முடிந்தது. இளம் வீரரான கோவாலிக் தொடர்ந்து துல்லியமான ஷாட்களை ஆட, 12 கேம்களின் முடிவில் இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க, டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஆரம்பத்தில் பின்தங்கிய கோவாலிக், பின்னர் அபாரமாக ஆடினார். இதனால் முதல் செட் 7-6 (5) என்ற கணக்கில் அவர் வசமானது. இந்த செட் 58 நிமிடங்கள் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய மரின் சிலிச், 2-ஆவது கேமில் கோவாலிக்கின் சர்வீஸை முறியடித்து 2-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து அசத்தலாக ஆடிய சிலிச், 6-ஆவது கேமில் மீண்டும் கோவாலிக்கின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பை நெருங்கினார். ஆனால் ஆக்ரோஷமாக போராடிய கோவாலிக், இறுதியில் தனது சர்வீஸை காப்பாற்றினார். அதே ஆக்ரோஷத்தோடு அடுத்த கேமை எதிர்கொண்ட கோவாலிக், அதில் சிலிச்சின் சர்வீஸை முறியடிக்க, 8 கேம்களின் முடிவில் இருவரும் 4-4 என சமநிலையில் இருந்தனர்.
இதன்பிறகு நெருக்கடிக்குள்ளான சிலிச், அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேநேரத்தில் கோவாலிக்கும் அவருக்கு இணையாக ஆட, இந்த செட்டும் டைபிரேக்கருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12-ஆவது கேமில் கோவாலிக்கின் சர்வீஸை முறியடித்த சிலிச், அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டின் ஆரம்பம் முதலே சிலிச் ஆக்ரோஷமாக ஆட முயற்சித்தார். ஆனால் கோவாலிக்கும் அசரவில்லை. அவர் 2 மற்றும் 8-ஆவது கேம்களில் சர்வீஸை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டபோதிலும், கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை காப்பாற்றினார். 11-ஆவது கேமில் 15-30 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்த சிலிச் பதற்றமடைந்தார். அதை சரியாகப் பயன்படுத்தி அந்த கேமை தன்வசமாக்கினார் கோவாலிக். இதனால் அவர் 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற, அடுத்த கேமில் கோவாலிக்கின் சர்வீஸை முறியடித்தால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்ப முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் சிலிச். ஆனால் அவர் கடுமையாகப் போராடியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. 3-ஆவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய கோவாலிக், சிலிச்சை போட்டியிலிருந்து வெளியேற்றினார். இந்த ஆட்டம் 2 மணி, 47 நிமிடங்கள் நடைபெற்றது.
கோவாலிக் தனது காலிறுதியில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவை சந்திக்கிறார். முன்னதாக மெத்வதேவ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த சீன தைபேவின் யென்-சன் லூவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
ரேமோஸ் வெற்றி: மற்றொரு ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ஆல்பர்ட் ரேமோஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸை தோற்கடித்தார். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இஸ்ரேலின் டூடி செலா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தென் கொரியாவின் ஹியோன் சுங்கை தோற்கடித்தார்.
காலிறுதியில் போபண்ணா ஜோடி: ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரேசிலின் மார்செலோ டெமோலினர்-குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. அதேநேரத்தில் இந்தியாவின் சாகேத் மைனேனி-ராம்குமார் ராமநாதன் ஜோடி 4-6, 6-0, 8-10 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ்-பிரான்ஸின் பெனாய்ட் பேர் ஜோடியிடம் தோல்வி கண்டது.
பயஸ் ஜோடி தோல்வி:
மற்றொரு ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-பிரேசிலின் ஆண்ட்ரே சா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்களில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடியிடம் தோல்வி கண்டது.

தோற்றிருந்தாலும் இழப்பில்லை: கோவாலிக்
சிலிச்சை வீழ்த்தியது குறித்து கோவாலிக் கூறுகையில், "இங்கு எனக்கும் ரசிகர்களின் ஆதரவு இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. சிலிச், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததால் அவருக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி இருந்தது. ஆனால் எனக்கு அதுபோன்ற எந்த நெருக்கடியும் இல்லை.
ஏனெனில், சிலிச் போன்ற முன்னணி வீரரிடம் தோற்பதால் எனக்கு எந்த இழப்பும் கிடையாது. இதற்கு முன்பு சிலிச் என்னை எங்கும் பார்த்திருக்க முடியாது. ஆனால் நான் அவருடைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அதனால் நான் பதற்றமின்றி எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி காண முடிந்தது' என்றார்.

தோல்வி ஏன்? சிலிச் விளக்கம்

Story image


அதிர்ச்சி தோல்வி கண்டது குறித்துப் பேசிய சிலிச், "இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் எனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆரம்பத்தில் என்னால் பந்தை சரியாக திருப்பியடிக்க முடியவில்லை. அது எனக்கு பின்னடைவாக அமைந்தது. கோவாலிக்கை இதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. அவருடைய ஆட்டம் குறித்து எனக்கு தெரியாததால் நான் தயக்கத்துடனேயே அவரை எதிர்கொண்டேன். அதுவும் தோல்விக்கு காரணம். அதேநேரத்தில் கோவாலிக் எனக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி என்னை வீழ்த்திவிட்டார்' என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.