ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காலிறுதியில் பெளதிஸ்டா, யூஸ்னி: யூகி பாம்ப்ரியை வெளியேற்றினார் பெனாய்ட் பேர்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷியாவின் மிகைல் யூஸ்னி, பிரான்ஸின் பெனாய்ட் பேர் அல்ஜாஸ் பெடேன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

News image

பந்தை ஆக்ரோஷமாக திருப்பும் பெளதிஸ்டா.

Updated On :5 ஜனவரி 2017, 8:47 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷியாவின் மிகைல் யூஸ்னி, பிரான்ஸின் பெனாய்ட் பேர் அல்ஜாஸ் பெடேன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்திய வீரர் யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெனாய்ட் பேரிடம் தோற்று வெளியேறினார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ராம்குமார், சாகேத் மைனேனி ஆகியோர் தங்களின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.
22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆவது நாளான வியாழக்கிழமை பிரதான கோர்ட்டில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் பெளதிஸ்டா அகுட்டும், பிரேசிலின் ரோஜெரியோ சில்வாவும் மோதினர்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய பெளதிஸ்டா, 6-ஆவது கேமில் மிக எளிதாக சில்வாவின் சர்வீஸை முறியடித்து 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அதேநேரத்தில் சில்வா சரிவிலிருந்து மீள்வதற்கு போராடினார். அதன் உச்சக்கட்டமாக 9-ஆவது கேமில் பெளதிஸ்டாவின் சர்வீஸை முறியடிக்க முயற்சித்தார். ஆனால் விடாப்பிடியாக போராடிய பெளதிஸ்டா, தனது சர்வீஸை காப்பாற்றியதோடு, அந்த செட்டையும் முடிவுக்கு கொண்டு வந்தார். 33 நிமிடங்கள் நடைபெற்ற அந்த செட் 6-3 என்ற கணக்கில் பெளதிஸ்டா வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 3-ஆவது கேமில் சில்வாவுக்கு நெருக்கடி கொடுத்தார் பெளதிஸ்டா. 3 முறை டியூஸ் வரை சென்ற அந்த கேமில் 3 முறையும் அட்வான்டேஜ் பெற்ற சில்வா, இறுதியில் தனது சர்வீஸை காப்பாற்றினார். இதையடுத்து ஆக்ரோஷமாக ஆடிய சில்வா, அடுத்த கேமில் பெளதிஸ்டாவுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
இதன்பிறகு அட்டகாசமாக ஆடிய பெளதிஸ்டா, 5 மற்றும் 7-ஆவது கேம்களில் சில்வாவின் சர்வீஸை முறியடித்தார். இதனால் அந்த செட் 6-2 என்ற கணக்கில் அவர் வசமாக, ஆட்டம் 1 மணி, 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இந்த ஆட்டத்தில் சில்வா அசத்தலாக ஆடியபோதும், பெளதிஸ்டா தனது அற்புதமான பேக்ஹேண்ட் ஷாட்களால் அவரை வீழ்த்தினார்.
பெளதிஸ்டா தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருப்பவரும், 2008 சென்னை ஓபன் சாம்பியனுமான ரஷியாவின் மிகைல் யூஸ்னியை சந்திக்கிறார். முன்னதாக யூஸ்னி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 7-5 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோவை தோற்கடித்தார்.
யூகி பாம்ப்ரி தோல்வி:

Story image

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பெனாய்ட் பேர் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவின் யூகி பாம்ப்ரியை தோற்கடித்தார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் 2-ஆவது கேமிலேயே தனது சர்வீஸை இழந்த பாம்ப்ரி, 5-ஆவது கேமில் பெனாய்ட் பேருக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால் விடாப்பிடியாக போராடிய பெனாய்ட், தனது சர்வீஸை மீட்டார். 6-ஆவது கேமில் கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை காப்பாற்றிய பாம்ப்ரி, 9-ஆவது கேமில் பெனாய்ட்டின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பை நெருங்கினார். ஆனால் கடுமையாகப் போராடிய பெனாய்ட், ஏஸ் சர்வீஸை அடித்து தனது சர்வீஸை காப்பாற்றியதோடு, அந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 3-ஆவது கேமில் பாம்ப்ரியின் சர்வீஸை முறியடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த பெனாய்ட் பேர், கோபத்தின் உச்சத்துக்கே சென்றார். அந்த கேமின்போது அவர் 3 முறை தனது ராக்கெட்டை பறக்கவிட்டார். தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டிய பெனாய்ட் பேர், 5-ஆவது கேமில் பாம்ப்ரியின் சர்வீஸை முறியடித்து 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு அடுத்தடுத்த கேம்களில் பாம்ப்ரியின் சர்வீஸை முறியடிக்க பெனாய்ட் பேர் முயன்றபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் பெனாய்ட் பேர் 6-4 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றி வெற்றி கண்டார். இந்த ஆட்டம் 1 மணி, 25 நிமிடங்கள் நடைபெற்றது.
பெனாய்ட் பேர் தனது காலிறுதியில் பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேனை தோற்கடித்தார். பெடேன் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (3), 6-7 (3), 7-6 (2) என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸானை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 3 மணி, 5 நிமிடங்கள் நடைபெற்றது.

அரையிறுதியில் போபண்ணா ஜோடி
ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-2, 3-6, 12-10 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரட்டானி-ஆஸ்திரியாவின் பிலிப் ஆஸ்வால்ட் ஜோடியைத் தோற்கடித்தது.
போபண்ணா-ஜீவன் ஜோடி தங்களின் அரையிறுதியில் அமெரிக்காவின் நிகோலஸ் மன்றோ-நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக் ஜோடியை சந்திக்கிறது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் ஜூர்கன் மெல்ஸர்-ஆர்ஜென்டீனாவின் ரென்úஸா ஆலிவோ ஜோடியைத் தோற்கடித்தது.


* ஒரு புள்ளியால் ஆட்டத்தின் முடிவே மாறும் என்று நினைக்கவில்லை. எவ்வித பயிற்சியும் இன்றி இந்த ஆட்டத்தில் களமிறங்கியபோதும், நன்றாகவே ஆடினேன். இரவு நேரத்தில் விளையாடுவதற்கு இந்த ஆடுகளம் மிக நன்றாக இருக்கிறது.
முன்னாள் டாப்-10 வீரரான யூஸ்னியை காலிறுதியில் சந்திப்பது சவாலானதுதான். நானும் அவருக்கு சவால் அளிப்பேன்.
அவர் வெற்றி பெற விரும்பினால், போராடி என்னை வீழ்த்தட்டும். *
-பெளதிஸ்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.