ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரையிறுதியில் பெளதிஸ்டா, டூடி செலா, பெனாய்ட் பேர்: ஆல்பர்ட் ரேமோஸ் அதிர்ச்சித் தோல்வி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட், இஸ்ரேலின் டூடி செலா, பிரான்ஸின் பெனாய்ட் பேர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர்

News image
Updated On :6 ஜனவரி 2017, 9:06 pm

ஏ.வி. பெருமாள்

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட், இஸ்ரேலின் டூடி செலா, பிரான்ஸின் பெனாய்ட் பேர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ஆல்பர்ட் ரேமோஸ் தனது காலிறுதியில் டூடி செலாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான 22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 5-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சர்வதேச தரவரிசையில் 27-ஆவது இடத்தில் இருக்கும் ஆல்பர்ட் ரேமோஸ் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் 96-ஆவது இடத்தில் இருக்கும் டூடி செலாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய டூடி செலா, முதல் செட்டின் முதல் கேமிலேயே ரேமோஸின் சர்வீஸை முறியடித்தார். முதல் கேமை இழந்த வேகத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ரேமோஸ் அடுத்த கேமில் டூடி செலாவின் சர்வீஸை பிடிக்க முயன்றார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதன்பிறகு 8-ஆவது கேமில் டூடி செலாவின் சர்வீஸை முறியடிக்க கடுமையாகப் போராடினார் ரேமோஸ். ஆனால் அதுவும் தோல்வியில் முடிய, மிகுந்த கோபமடைந்த ரேமோஸ் உரக்கக் கத்தினார்.
தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய ரேமோஸின் கடுமையான போராட்டத்துக்கு 10-ஆவது கேமில் பலன் கிடைத்தது. அதில் டூடி செலாவின் சர்வீஸை முறியடித்த ரேமோஸ், 5-5 என்ற கணக்கில் சமநிலையை எட்டினார். ஆனால் அடுத்த கேமில் ரேமோஸின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்த டூடி செலா, 12-ஆவது கேமில் தனது சர்வீஸை தன்வசப்படுத்தினார். இதனால் 55 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட் 7-5 என்ற கணக்கில் டூடி செலா வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் 3-ஆவது கேமில் ரேமோஸின் சர்வீஸை முறியடித்த டூடி செலா, அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, ஆட்டம் 1 மணி, 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் டூடி செலாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது அவருடைய துல்லியமான ஷாட்கள்தான். குறிப்பாக ஒரு கையில் மிக அற்புதமாக பேக்ஹேண்ட் ஷாட்களை ஆடியது அவருடைய வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது.
சென்னை ஓபனில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள டூடி செலா, அடுத்ததாக ரஷியாவின் மெத்வதேவை சந்திக்கிறார். இதற்கு முன்னர் 2010-ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறியுள்ளார் டூடி செலா. சென்னை ஓபனில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள டூடி செலாவுக்கு இது 12-ஆவது வெற்றியாகும்.
முன்னதாக மெத்வதேவ் தனது காலிறுதியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் ஜோசப் கோவாலிக்கை தோற்கடித்தார். தகுதிச்சுற்று வீரரான கோவாலிக் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த குரோஷியாவின் மரின் சிலிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தது
குறிப்பிடத்தக்கது.
பெடேன் தோல்வி: மற்றொரு காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பேர் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேனை 1 மணி, 2 நிமிடங்களில் எளிதாக தோற்கடித்தார்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய பெனாய்ட் பேர், முதல் செட்டின் 4-ஆவது கேமில் பெடேனின் சர்வீஸை முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
மறுமுனையில் பின்னடைவிலிருந்து மீள்வதற்குப் போராடிய பெடேன், 9-ஆவது கேமில் பெனாய்ட் பேரின் சர்வீஸை முறியடிக்க முயன்றார். ஆனால் விடாப்பிடியாக போராடிய பெனாய்ட் பேர், தனது சர்வீஸை காப்பாற்றியதோடு, அந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டுக்கு முன்னதாக இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் பெடேன். ஆனாலும் அவரால் அந்த செட்டில் சரியாக ஆட முடியவில்லை. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பெனாய்ட் பேர், அந்த செட்டில் பெடேனின் 3 சர்வீஸ்களையும் முறியடித்ததோடு, அந்த செட்டை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் 2-ஆவது செட் 21 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.
சென்னை ஓபனில் 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பெனாய்ட் பேர். இதற்கு முன்னர் 2013, 2016 ஆகிய ஆண்டுகளிலும் அரையிறுதி வரை அவர் முன்னேறியிருந்தார்.
பெனாய்ட் பேர் தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட்டை சந்திக்கிறார். முன்னதாக பெளதிஸ்டா தனது காலிறுதியில் 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த ரஷியாவின் மிகைல் யூஸ்னியைத் தோற்கடித்தார்.

இறுதிச் சுற்றில் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் கில்லர்மோ டுரான்-ஆண்ட்ரேஸ் மால்டெனி ஜோடியைத் தோற்கடித்தது.

தோல்வி ஏன்? ரேமோஸ் பதில்
தோல்வி குறித்துப் பேசிய ரேமோஸ், "இந்த ஆட்டத்தின் முதல் செட்டை வெற்றியோடு தொடங்க விரும்பினேன். ஆனால் நீண்ட ரேலிகளை (தொடர்ச்சியான ஷாட்கள்) என்னால் ஆட முடியவில்லை. 8-ஆவது கேமில் அவசரப்பட்டு விளையாடியதால் டூடி செலாவின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பை இழந்தேன். இதனால் முதல் செட்டை இழக்க நேர்ந்தது. 2-ஆவது செட்டை பொறுத்தவரையில் என்னால் டூடி செலாவுக்கு ஈடுகொடுத்து ஆட முடியவில்லை' என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.