சாம்பியன் பட்டம் வெல்வது யார்? பெளதிஸ்டா-மெத்வதேவ் இன்று மோதல்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ்ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ்
ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்கள் இருவரிடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மெத்வதேவ் தனது அரையிறுதியில் 4-6, 7-6 (2), 6-2 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் டூடி செலாவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். மற்றொரு அரையிறுதியில்
பெளதிஸ்டா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் பெனாய்ட் பேரை வீழ்த்தினார். போட்டித்
தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் பெளதிஸ்டா, சென்னை ஓபனில் 2-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னர் 2013-இல்
இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பெளதிஸ்டா, அப்போது செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சிடம் தோல்வி கண்டார்.
அதேநேரத்தில் 20 வயதான மெத்வதேவ், ஏடிபி போட்டியில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பெளதிஸ்டாவை வீழ்த்தும்பட்சத்தில் அவர்
தனது முதல் ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றுவார்.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணைய (எஸ்டிஏடி) டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 6-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதியில் சர்வதேச தரவரிசையில் 96-ஆவது இடத்தில் உள்ள டூடி செலாவும்,
99-ஆவது இடத்தில் இருக்கும் மெத்வதேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் 7-ஆவது கேமில் மெத்வதேவின் சர்வீஸை
முறியடித்த டூடி செலா, அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டில் டூடி செலாவுக்கு கடும் சவால் அளித்தார் மெத்வதேவ். அவர், 4-ஆவது கேமில் டூடி செலாவின் சர்வீஸை முறியடிக்க,
அடுத்த கேமில் மெத்வதேவின் சர்வீஸை முறியடித்து பதிலடி கொடுத்தார் டூடி செலா.
தொடர்ந்து இருவரும் கடுமையாகப் போராட, 9-ஆவது கேமில் மெத்வதேவின் சர்வீஸை முறியடித்தார் டூடி செலா. ஆனால் அடுத்த கேமில் அபாரமாக ஆடிய
மெத்வதேவ், டூடி செலாவின் சர்வீஸை முறியடிக்க, 12 கேம்களின் முடிவில் இருவரும் 6-6 என சமநிலையில் இருந்தனர். இதையடுத்து டைபிரேக்கர் வாய்ப்பு
வழங்கப்பட்டது. அதை 7-2 என்ற கணக்கில் வென்ற மெத்வதேவ், 2-ஆவது செட்டை 7-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டின் முதல் கேமிலேயே டூடி செலாவின் சர்வீஸை முறியடித்தார் மெத்வதேவ். இதனால்
நம்பிக்கையை இழந்த டூடி செலா, 5-ஆவது கேமிலும் தனது சர்வீஸை இழக்க, மெத்வதேவ் 6-2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றி கண்டார். 2
மணி, 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தை 206 கி.மீ. வேகத்தில் ஏஸ் சர்வீஸை விளாசி முடித்தார் மெத்வதேவ்.
பெளதிஸ்டா வெற்றி: பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஒற்றையர் அரையிறுதியில் பெளதிஸ்டாவும், பெனாய்ட் பேரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் 4-ஆவது கேமில் பெனாய்ட் பேரின் சர்வீஸை முறியடிக்க முயன்றார் பெளதிஸ்டா. ஆனால் விடாப்பிடியாக போராடிய பெனாய்ட் பேர், தனது சர்வீஸை காப்பாற்றிக் கொண்டார். அதேநேரத்தில் தொடர்ந்து அபாரமாக ஆடிய பெளதிஸ்டா, 8-ஆவது கேமில் பெனாய்ட் பேரின் சர்வீஸை முறியடிக்க, அந்த செட் 30 நிமிடங்களில் 6-3 என்ற கணக்கில் அவர் வசமானது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் முதல் கேமிலேயே சர்வீஸை இழந்த பெனாய்ட் பேர், பதற்றமடைந்தார். அவர், 3-ஆவது கேமில் மீண்டும் தனது சர்வீஸை இழந்தபோது, உச்சக்கட்ட கோபமடைந்ததோடு, பந்தை அருகில் இருந்த சுவரில் அடித்து நடுவரின் எச்சரிக்கைக்கும் உள்ளானார். ஒரு கட்டத்தில் 0-4 என்ற கணக்கில் பின்தங்கிய பெனாய்ட் பேர், பின்னர் அபாரமாக ஆடினார். இதனால் 6-ஆவது கேமில் பெளதிஸ்டாவின் சர்வீஸை முறியடித்ததோடு, 7-ஆவது கேமின் முடிவில் 3-4 என்ற நிலைக்கு வந்தார். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் பெளதிஸ்டா 2-ஆவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, பெனாய்ட் பேரை வீழ்த்தினார். நீண்ட நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் 1 மணி, 8 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
சென்னை ஓபனில் 3-ஆவது முறையாக அரையிறுதியில் தோற்றுள்ளார் பெனாய்ட் பேர். இதற்கு முன்னர் 2013, 2016 ஆகிய ஆண்டுகளிலும் அவர் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை: மெத்வதேவ்
ஏடிபி போட்டியில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறித்துப் பேசிய மெத்வதேவ், "இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது எனக்குள் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இதுவரை விளையாடிய மற்ற ஆட்டங்களைப் போன்றே
இறுதிச் சுற்றையும் அணுகுவேன். அதில் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பேன்.
கடந்த சீசனில் நான் சிறப்பாக ஆடியபோதும் என்னால் சேலஞ்சர் போட்டியில்கூட இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. கடந்த சீசனின் இறுதியில்
கிடைத்த ஓய்வு நேரத்தில் கடுமையாக பயிற்சி பெற்றதன் மூலம் இப்போது ஏடிபி போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறேன். பேக் ஹேண்ட்,
போர்ஹேண்ட், சர்வீஸ் என எல்லா விஷயங்களிலும் எனது ஆட்டம் மேம்பட்டிருப்பதை உணர முடிகிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...