சென்னை ஓபன்: பெளதிஸ்டா சாம்பியன்
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் சாம்பியன் பட்டம் வென்றார்.

கோப்பையுடன் பெளதிஸ்டா

கோப்பையுடன் பெளதிஸ்டா
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பெளதிஸ்டா அகுட் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் சென்னை ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் பெளதிஸ்டா. ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற 5-ஆவது ஏடிபி பட்டம் இது.
போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த பெளதிஸ்டா, தனது இறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவை தோற்கடித்தார். சென்னை ஓபனில் முதல்முறையாக பங்கேற்றவரான மெத்வதேவ், தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல்முறையாக ஏடிபி போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாடிய மகிழ்ச்சியோடு விடை பெற்றார்.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் கடந்த 7 நாள்களாக நடைபெற்றது.
இதில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் பெளதிஸ்டாவும், 99-ஆவது இடத்தில் இருக்கும் மெத்வதேவும் மோதினர்.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அசத்தலாக ஆடிய பெளதிஸ்டா 4-ஆவது கேமில் மெத்வதேவின் சர்வீûஸ முறியடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு 6-ஆவது கேமில் மீண்டும் மெத்வதேவின் சர்வீûஸ முறியடிக்க முயன்றார் பெளதிஸ்டா. ஆனால் விடாப்பிடியாக போராடிய மெத்வதேவ், 3 முறை டியூஸ் வரை சென்ற அந்த கேமை தன்வசமாக்கிக் கொண்டார்.
இதன்பிறகு தனது சர்வீûஸ காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட மெத்வதேவால், பெளதிஸ்டாவின் சர்வீûஸ முறியடிப்பதில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால் முதல் செட்டை பௌதிஸ்டா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 33 நிமிடங்களில் முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டிலும் பெளதிஸ்டா அபாரமாக ஆட, முதல் கேமிலேயே தனது சர்வீûஸ தக்கவைக்க கடுமையாகப் போராடினார் மெத்வதேவ். 3-ஆவது கேமில் மெத்வதேவுக்கு பெளதிஸ்டா நெருக்கடி கொடுக்க, அதில் ஒரு ரேலியில் மட்டும் 30 ஷாட்கள் ஆடப்பட்டன. 4-ஆவது கேமில் பெளதிஸ்டாவின் சர்வீûஸ முறியடிக்க கடுமையாகப் போராடினார் மெத்வதேவ். ஆனால் பெளதிஸ்டா மிக எளிதாக அவருடைய முயற்சியை தகர்த்தார்.
8 கேம்கள் வரை இருவரும் சமநிலையில் இருக்க, 9-ஆவது கேமில் மெத்வதேவின் சர்வீûஸ முறியடித்த பெளதிஸ்டா, 6-4 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றி, 10-ஆவது கேமோடு போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த ஆட்டம் 1 மணி, 14 நிமிடங்கள் நடைபெற்றது.
"மெத்வதேவுக்கு சிறப்பான எதிர்காலம்'
சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கையில் கோப்பையுடன் மகிழ்ச்சி பொங்கப் பேசிய பெளதிஸ்டா, "மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். எப்போதுமே ஆக்ரோஷமாகவும், திடமாகவும் ஆட விரும்புவேன். இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நான் திட்டமிட்டபடி மெத்வதேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினேன்.
அதேநேரத்தில் மெத்வதேவ் மிகச்சிறந்த வீரர் ஆவார். அவர் நல்ல உயரமாக இருப்பதால் மிக நன்றாக சர்வீஸ் அடிக்கிறார். பேஸ்லைனில் இருந்து நல்ல ஷாட்களை ஆடுகிறார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது' என்றார்.
மெத்வதேவ்: தோல்வி குறித்துப் பேசிய மெத்வதேவ், "வலது காலில் வலி இருந்ததால் எனது பயிற்றுநரை அழைத்து சிகிச்சை பெற்றேன். ஆனால், அதன் காரணமாகத்தான் நான் தோற்றேன் என்று கூற முடியாது. பெளதிஸ்டா அனைவரும் வியக்கக்கூடிய ஒரு ஆட்டத்தை ஆடினார். அதனால் அவருடைய ஒரு சர்வீûஸக்கூட என்னால் முறியடிக்க முடியவில்லை' என்றார்.
ரூ.54 லட்சம் பரிசு
ஒற்றயைர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ராபர்ட்டோ பெளதிஸ்டாவுக்கு ரூ.54 லட்சம் ரொக்கப் பரிசும், 250 ஏடிபி ரேங்கிங் புள்ளிகளும் கிடைத்தன. இறுதிச் சுற்றில் தோல்வி கண்ட டேனியல் மெத்வதேவுக்கு ரூ.28.5 லட்சமும் 150 ஏடிபி புள்ளிகளும் கிடைத்துள்ளன.
இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிக்கு ரூ.16 லட்சம் மற்றும் 250 ஏடிபி புள்ளிகளும், இரண்டாவது இடத்தைப் பிடித்த பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடிக்கு ரூ.8.5 லட்சம் மற்றும் 150 ஏடிபி புள்ளிகளும் கிடைத்தன.
"சொன்னதை செய்துவிட்டேன்'
சென்னை ஓபனில் முதல்முறையாக பங்கேற்ற 20 வயது மெத்வதேவ் இறுதிச்சுற்று வரை முன்னேறி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற டிராவின்போது "இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவீர்களா?' என கேட்டபோது, "நிச்சயம் முன்னேறுவேன்' என்று நம்பிக்கையோடு பதிலளித்தார்.
இறுதி ஆட்டத்துக்குப் பிறகு பேசிய மெத்வதேவ், "ஆரம்பத்தில் நீங்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவீர்களா என கேட்டீர்கள். ஆமாம் என்றேன். சொன்னதைப் போலவே இறுதிச்சுற்று வரை வந்துவிட்டேன்' என்றார். இப்போது சென்னை ரசிகர்களிடம் இருந்து பிரியா விடை பெற்றிருக்கிறார் மெத்வதேவ். அடுத்த முறை அவர் இங்கு வரும்போது நிச்சயம் அவருக்கு சென்னை ரசிகர்களின் பலத்த ஆதரவு இருக்கும் என்று நம்பலாம். திங்கள்கிழமை புதிய தரவரிசை வெளியாகும்போது, மெத்வதேவ் 54-ஆவது இடத்துக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...