புரோ கபடியை விறுவிறுப்பாக்கிய விதிமுறைகள்!
இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் நீண்ட காலமாக விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. இன்றைக்கும் ஏராளமான கிராமங்களில் இரவு நேரத்தில் மின்னொளியில் திருவிழா போன்று கபடி போட்டிகள்


இந்தியாவின் பட்டிதொட்டி எங்கும் நீண்ட காலமாக விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. இன்றைக்கும் ஏராளமான கிராமங்களில் இரவு நேரத்தில் மின்னொளியில் திருவிழா போன்று கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் அது இப்போது தொழில்முறை (புரோ கபடி) விளையாட்டான பிறகு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. காரணம் விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றம். வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்திருக்கிறது புரோ கபடி. டி20 கிரிக்கெட் போட்டி அளவுக்கு "த்ரில்'லாக மாறியிருக்கிறது கபடி. டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில்கூட ஆட்டத்தின் போக்கு மாறலாம். அதேபோன்றுதான் புதிய விதிமுறைகளால் கபடியிலும் கடைசி வரை பரபரப்பு நீடிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக புரோ கபடி லீகில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளில் சில...
மணல் தரையிலிருந்து மேட்: மணல் தரையில் விளையாடப்பட்ட கபடி, இப்போது மேட்டில் விளையாடப்படுகிறது. இது ஆரம்பத்தில் வீரர்களுக்கு கடினமாக இருந்தாலும், இப்போது சுலபமாகிவிட்டது. போட்டி, மேட்டில் நடைபெறுவதால் வீரர்கள் ஷூ அணிந்து விளையாடுகிறார்கள்.
புரோ கபடி விதிமுறைப்படி ஓர் அணி சார்பில் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே வெற்று ரைடு சென்று வர முடியும். 3-ஆவது ரைடு வாழ்வா, சாவா ரைடாகும்.
அதாவது 3-ஆவது ரைடின்போது ரைடர், எதிரணியினரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இல்லையென்றால் எதிரணியினரிடம் பிடிபட வேண்டும். இரண்டும் இல்லையெனில் ரைடர் ஆட்டமிழந்ததாகக் கருதப்படுவார். பொதுவாக கபடியில் ஒரு ரைடர் 45 விநாடிகளோ அல்லது அதற்கு மேலோ ரைடு செல்லலாம். ஆனால் புரோ கபடியில் அதிகபட்சமாக 30 விநாடிகள் மட்டுமே ரைடு செல்ல முடியும். இதனால் எந்த அணியும் நேரத்தைக் கடத்த முடியாது. இதன் காரணமாக புரோ கபடி விறுவிறுப்பானதாக மாறியிருக்கிறது.
பயிற்சியாளருக்கான நேரம்: பொதுவாக கபடி போட்டி நடைபெறும்போது அதில் விளையாடும் அணிகளின் பயிற்சியாளர்கள் ஆடுகளத்தின் அருகே நின்று கொண்டு தங்கள் அணியினருக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் புரோ கபடியில் பயிற்சியாளருக்கென்று தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓர் ஆட்டத்தின்போது பயிற்சியாளர் ஒருவர், தங்கள் அணியினரிடம் இருமுறை மட்டுமே பேச முடியும். அதாவது முதல் பாதி ஆட்டத்தில் ஒரு முறையும், 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஒரு முறையும் மட்டுமே பேசலாம். ஒவ்வொரு முறையும் பேசும் நேரம் 20 விநாடிகள் மட்டுமே. இதனால் புரோ கபடியில் கேப்டனின் பங்கு அதிகமாகியுள்ளது. அணியை வழிநடத்துவது, எதிரணி வீரர்களை கணித்து அதற்கேற்றவாறு ஆட்ட உத்தியை மாற்றுவது என கேப்டனுக்கு அதிக பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ரைடு: பொதுவாக கபடியில் ஒருவர் எத்தனை பேரை ஆட்டமிழக்கச் செய்தாலும், அதற்கேற்றவாறு அவருக்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் கிடைக்காது. ஆனால் புரோ கபடியில் ஒரு ரைடர், 3 பேரை அவுட்டாக்கினால் அது சூப்பர் ரைடாக அங்கீகரிக்கப்படுகிறது. 3 அல்லது அதற்கு குறைவான வீரர்கள் சேர்ந்து ஒரு ரைடரை பிடித்தால் அது "சூப்பர் டேக்கிள்' என அழைக்கப்படுகிறது. இதேபோல் ஒரு வீரர் ஓர் ஆட்டத்தில் 5 முறை ரைடர்களை பிடிக்கும்போது அது "ஹை-5' என்றும், ஒரு ரைடர் 10 புள்ளிகளைப் பெறும்போது அது "சூப்பர்-10' என்றும் அழைக்கப்படுகிறது.
மேல்முறையீடு: நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முறை புரோ கபடியில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் முதல் பாதி ஆட்டத்தில் ஒரு மேல்முறையீடு வாய்ப்பும், 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஒரு மேல்முறையீடு வாய்ப்பும் வழங்கப்படுகின்றன. மேல்முறையீடு செய்த அணிக்கு சாதகமாக 3-ஆவது நடுவரின் தீர்ப்பு அமையுமானால், அந்த மேல்முறையீடு வாய்ப்பு அப்படியே நீடிக்கும். ஒருவேளை 3-ஆவது நடுவரின் தீர்ப்பு மேல்முறையீடு செய்த அணிக்கு எதிராக இருக்குமானால், அதன்பிறகு சம்பந்தப்பட்ட அணியால் மேல்முறையீடு செய்ய முடியாது.
மூளை விளையாட்டு: ஒரு காலத்தில் உடல்பலம் மிக்கவர்களின் விளையாட்டாக இருந்த கபடி, புதிய விதிமுறைகளால் இப்போது மூளையைப் பயன்படுத்தக்கூடிய விளையாட்டாக மாறியிருக்கிறது. அதனால் புரோ கபடியில் டெக்னிக்குகளையும், சரியான உத்திகளையும் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே ஜொலிக்க முடிகிறது.
மற்ற விளையாட்டுகளைப் போலவே விடியோ மூலம் எதிரணியினரின் ஆட்டத்திறனை அறியும் வாய்ப்பு புரோ கபடி வீரர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் புரோ கபடி வீரர்கள் தங்களின் தவறை சரி செய்து கொள்வதோடு, எதிராளிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து அதற்கேற்றபடி திட்டங்களை வகுத்துக் கொண்டு களமிறங்குகிறார்கள்.
புரோ கபடி லீகின் முதல் இரு சீசன்களில் ரைடர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆனால் இப்போது "சூப்பர் டேக்கிளுக்கு' 2 புள்ளிகள் கிடைப்பதால், "டிபன்டர்'களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிப்பது கடினமாகியிருக்கிறது. கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் களமிறங்கும் வீரர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதைப் போன்று கபடி வீரர்களுக்கும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொழில்நுட்பங்கள்: மிளிரும் மின் விளக்குகளுக்கு மத்தியில் வண்ணமயமான மேட்டுகளில் போட்டி நடைபெறுவது கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. 18 உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் கபடிப் போட்டி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 3டி தொழில்நுட்பம் (முப்பரிமாணத் தோற்றம்), 360 டிகிரி காட்சிகள், முக்கியக் காட்சிகளின் ரீபிளே, வீரர்களின் ஆக்ரோஷம், ரசிகர்கள் உணர்ச்சிவசப்படும் காட்சி என பல விஷயங்கள் புரோ கபடியை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன. அதனால் புரோ கபடியை பார்த்து ரசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 4 சீசன்களில் மட்டும் 51 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
மொத்தத்தில் புதிய விதிமுறைகள் புரோ கபடிக்கும், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன. அதேவேளையில் புரோ கபடியில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...