புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை பிரபலப்படுத்த காட்சிப் போட்டிகள்
புரோ கபடிப் போட்டியில் முதல்முறையாக களமிறங்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியை பிரபலப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப் போட்டிகளை நடத்தவுள்ளதாக அதன் தலைமைச்


புரோ கபடிப் போட்டியில் முதல்முறையாக களமிறங்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியை பிரபலப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப் போட்டிகளை நடத்தவுள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி வருண் தெரிவித்தார்.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டி வரும் 28-ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. 3 மாதங்கள் நடைபெறவுள்ள இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட நான்கு புதிய அணிகள் களமிறங்குகின்றன. இதனால் இந்த சீசனில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த நிலையில் புரோ கபடி லீக் போட்டி தொடர்பான கருத்தரங்கு மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வருணிடம் பேசியதிலிருந்து...
தமிழ் தலைவாஸ் அணியைப் பற்றி...
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர், ஓமன் மற்றும் மலேசியாவிலிருந்து தலா ஒருவர் உள்பட மொத்தம் 25 வீரர்கள் எங்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரான அஜய் தாக்குர் மற்றும் அமித் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என சமபலம் கொண்ட அணியாக எங்கள் அணி உள்ளது. எங்கள் வீரர்களிடம் எவ்வித சவாலையும் சந்திக்கக்கூடிய நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் அணியின் பயிற்சி முகாம் பற்றி...
சென்னையில் உள்ள சிட்டி சென்டரின் மேல்தளத்தில் பயிற்சியாளர் பாஸ்கரன் தலைமையில் எங்கள் அணியின் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
உங்கள் அணியை பிரபலப்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
எங்கள் அணியினர் வரும் 8-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து காட்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். முதல் காட்சிப் போட்டி கோவையில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் காட்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. நாங்கள் செல்லும் ஊர்களில் பலம் வாய்ந்த அணிகள் இருந்தால், அதில் இருந்து முக்கிய வீரர்களை எங்கள் அணியுடன் கலந்து காட்சிப் போட்டிகளில் விளையாடுவோம்.
இதுதவிர பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் எங்கள் அணியைப் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வானொலி, தொலைக்காட்சிகள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் எங்கள் அணியைப் பற்றிய பல்வேறு விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
தமிழகம் முழுவதுமே கபடி விளையாட்டு பிரபலமான ஒன்றாகும். அதனால் தமிழகத்தில் வேறு எங்காவது புரோ கபடி போட்டியை நடத்தும் திட்டம் உள்ளதா?
இந்த சீசனைப் பொறுத்தவரையில் போதிய காலஅவகாசம் இல்லாததால், சென்னையில் உள்ள ஜவாஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் மட்டுமே போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சீசனில் சென்னைக்கு வெளியே போட்டியை நடத்த முயற்சி எடுக்கப்படும்.
இளம் கபடி வீரர்களை ஊக்குவிக்கவும், திறமையான கபடி வீரர்களை உருவாக்கவு ம் அடிப்படை பயிற்சி முகாம் நடத்தும் திட்டம் இருக்கிறதா?
அடிப்படை பயிற்சி முகாமில் தீவிர கவனம் செலுத்தவிருக்கிறோம். புரோ கபடி போட்டி நடைபெறும் சமயத்தில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடிப்படை பயிற்சி முகாம்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதேபோல் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாமும் நடத்தப்படவுள்ளது.
எங்கள் அணியின் உரிமையாளர்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. கபடி விளையாட்டை வளர்க்க வேண்டும், திறமையான இளம் கபடி வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...